ADDED : மார் 04, 2026 05:39 AM

திருப்பூர்: திருப்பூர் நகரில் குடிநீர் குழாய்கள் உடைப்பால், குடிநீர் வெளியேறி ரோடுகள் வீணாகும் அவலம் தொடர்கதையாக உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது குடிநீர் வழங்கும் வகையில், பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் தற்போது பணிகள் நிறைவடைந்து குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் சப்ளையை கண்காணிக்கும் வகையில், 'ஸ்கேடா' கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஒரு சில மேல்நிலைத் தொட்டிகள் தவிர பெரும்பாலான தொட்டிகள் பணிகள் நிறைவடைந்து சோதனை அடிப்படையில், முழு அளவிலான குடிநீர் குழாய்கள் வழியாக கொண்டு சென்று கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டத்தில் அழுத்தம் ஏற்ற தாழ்வு காரணமாக பிரதான குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறுகிறது.
சில இடங்களில் ரோடு பணி, குழி தோண்டும் பணி காரணமாக குழாயில் உடைப்பு ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது.
அவ்வகையில், தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் பிரதான குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பெருமளவு குடிநீர் வெளியேறி ரோட்டில் சென்று பாய்கிறது.
தொடர்ச்சியாக குடிநீர் வெளியேறும் நிலையில் ரோடு சேதமாகி, பெரிய குழிகள் ரோட்டில் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, குழாய் உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதோடு சேதமாகும் ரோடுகளும் சரி செய்யப்பட வேண்டும்.
