/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பு கழிவுகளை நேரடியாக கொட்டுவதால் மறையும் கால்வாய்! அரசுத்துறைகளும் கண்டுகொள்ளாததால் அவலம்
/
குடியிருப்பு கழிவுகளை நேரடியாக கொட்டுவதால் மறையும் கால்வாய்! அரசுத்துறைகளும் கண்டுகொள்ளாததால் அவலம்
குடியிருப்பு கழிவுகளை நேரடியாக கொட்டுவதால் மறையும் கால்வாய்! அரசுத்துறைகளும் கண்டுகொள்ளாததால் அவலம்
குடியிருப்பு கழிவுகளை நேரடியாக கொட்டுவதால் மறையும் கால்வாய்! அரசுத்துறைகளும் கண்டுகொள்ளாததால் அவலம்
ADDED : ஜூலை 17, 2025 09:54 PM

உடுமலை: பி.ஏ.பி., பாசன கால்வாய் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளதால், கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தீர்வு காண வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனம், உடுமலை கால்வாய் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நான்கு மண்டல பாசனத்தின் போதும் இக்கால்வாயில் நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், இக்கால்வாய் குப்பை கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது.
கால்வாய் வழியோரத்தில், ஜல்லிபட்டி, பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம், பெரிய கோட்டை ஊராட்சிகள் மற்றும் உடுமலை நகராட்சி குடியிருப்புகள் அமைந்துள்ளன.
நீர் செல்வதில் சிக்கல்
இக்குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நேரடியாக கால்வாய் கரை மற்றும் நீரில் நேரடியாக கொட்டப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளும் உள்ளதால், கால்வாயில் நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
குறுகிய பாலங்கள், மடைகளில் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்படுவதால், கால்வாயில் செல்லும் நீர் வழிந்து, கரை உடைப்பு ஏற்படுகிறது.
ஜல்லிபட்டி, போடிபட்டி, பள்ளபாளையம், கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகளில் சேகரிக்கப்படும், குப்பை, கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளே கால்வாய் கரையில் கொட்டி, குப்பைக்கிடங்காக மாற்றி வருகின்றன.
குப்பையுடன், ஆடு, மாடு, கோழி என இறைச்சி கழிவுகளும், மனித கழிவுகளும் நேரடியாக கொட்டப்பட்டு, பாசன நீர் முழுவதும் மாசுபடுகிறது.
மேலும், கால்வாயின் இரு புறமும் ஜீப் டிராக் உள்ள நிலையில், அதனையும் ஆக்கிரமித்து வீடுகள் அமைக்கப்பட்டு, கழிவு நீர் குழாய்கள் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் குப்பை தொட்டிகளை கால்வாய் கரையிலேயே அமைத்துள்ளன. அதிலும், மது பாட்டில்களை உடைத்து, வாய்க்காலில் வீசுவதால், விளை நிலங்களுக்கு சென்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாசன ஆதாரமாக உள்ள கால்வாய் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்பினர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்திற்கு வரும், 27ம் தேதி நீர் திறக்க உள்ள நிலையில், கால்வாய் சுத்தம் செய்ய உள்ளே நுழைய முடியாத அளவிற்கு, மனித கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் தேங்கி ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
குழு அமைக்கணும்
இது குறித்து பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கூறியதாவது : ஊராட்சிகள் மற்றும் நகர பகுதியில் உடுமலை கால்வாய் அமைந்துள்ள நிலையில், வழியோரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளே, கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றியுள்ளனர்.
அபாயகரமான கழிவுகள், பிளாஸ்டிக், துணி போன்ற திட கழிவுகள் கால்வாய் நீர் வழித்தடம் மற்றும் மடைகளை அடைத்துக்கொள்வதால், நீர் செல்ல வழியின்றி, வழிந்தும், கரை உடைப்பு ஏற்பட்டும் பாதிப்பு ஏற்படுகிறது.
நீர் திறக்கும் போது, 24 மணி நேரமும் விவசாயிகள் கால்வாயில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடும் அவலம் உள்ளது.
இதற்கு தீர்வு காண, வழியோர கிராம உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், நீர் வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசாரை கொண்ட குழு அமைத்து, கால்வாய் கரை முழுவதும் துாய்மைப்படுத்த வேண்டும்.
கழிவுகளை கொட்டுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணவும், கரையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
இரு புறமும், கிராமம் மற்றும் நகர பகுதியில், கம்பி வேலி அமைக்கவும் வேண்டும். விரைவில் தீர்வு காணாவிட்டால், பி.ஏ.பி., விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.