ADDED : ஜன 01, 2024 12:24 AM
திருப்பூர்:நகை பறிப்பு, கொள்ளை வழக்கில் தொடர்புடைய, எட்டு பேரை குண்டாசில் போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில், சங்கராயிதோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 89. மனைவி முத்தாயம்மாள், 80. கடந்த நவ., 22ம் தேதி வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியிடம் முகமூடி கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 41 சவரன் நகை, 10 ஆயிரம், இரு மொபைல் போன்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.
கொள்ளை தொடர்பாக, 11 பேர் கொண்ட கும்பலை வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர். அதில், மூளையாக செயல்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த ரிச்சர்ட் சச்சின், 24, எடிசன்ராஜ், 24, அரவிந்தன், 26, விருது நகரை சேர்ந்த பிரவீன்லாரன்ஸ், 28 என, நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., சாமி நாதன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், நான்கு பேரையும் குண்டாசில் போலீசார் கைது செய்தனர்.
n பெருமாநல்லுார், தட்டான்குட்டையை சேர்ந்தவர் ஜோதிகா, 47; மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த நவ., 10ம் தேதி மளிகை கடையில் தனியாக இருந்த போது, இருவர் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து, 9 சவரன் நகையை பறித்து சென்றனர். புகாரின் பேரில், திருநெல்வேலியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 25, ஆத்தீஸ்வரன், 27 என, இருவரை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்து சிறையில் உள்ளனர். தற்போது, இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
n அவிநாசி மடத்துப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கந்தசாமி, 50. பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த அக்., 31ம் தேதி கந்தசாமி தனது குடும்பத்துடன் டூவீலரில் சென்றார். அவிநாசி - திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் டூவீலரில் வந்த இருவர், மனைவி அணிந்திருந்த, 10.5 சவரன் நகையை பறித்து சென்றனர். புகாரின் பேரில், ஈரோட்டை சேர்ந்த கவின், 22, கடலுாரை சேர்ந்த மாரியப்பன், 26 என, இருவரையும் அவிநாசி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு வழக்குகள் இருப்பதால், இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.