UPDATED : ஆக 03, 2026 09:25 PM
ADDED : ஆக 03, 2026 09:02 PM

அவிநாசி:அவிநாசி தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளை சார்பில், 'ஆறுகளை போற்றுவோம்... ஆடிப்பெருக்கை கொண்டாடுவோம்,' என்ற தலைப்பில் தமிழர் பாரம்பரிய கலைவிழா நடைபெற்றது.
அவிநாசி, வி.எஸ்.வி. காலனியில், ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆப்பிள் மழலையர் பள்ளியில் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அப்புசாமி, பொருளாளர் ராயப்பன், கிளை தலைவர்கள் குமாரசாமி, அங்கப்பன், ஆப்பிள் மழலையர் பள்ளி தாளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையில், கும்மியாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழர் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளை, குளம் காக்கும் அமைப்பினர், அவிநாசி கம்பன் கழகம் ஆகியன இணைந்து மங்கலம் ரோட்டில் உள்ள தாமரை குளப்படித்துறையில் வருண பகவானை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஆரத்தி எடுத்து மழைநீரை வரவேற்று மலர்துாவி வழிபாடு செய்தனர்.
