/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையில்லா நகரம்; மெய்ப்படாத கனவு
/
குப்பையில்லா நகரம்; மெய்ப்படாத கனவு
ADDED : ஏப் 11, 2025 11:09 PM

'சிவப்பு தொட்டியில், மக்கும் குப்பையை போடணும்; பச்சை தொட்டியில், மக்காத குப்பையை போடணும்; தினமும் காலை வீடு தேடி வரும் அந்தந்த உள்ளாட்சிகளைச் சேர்ந்த துாய்மைப் பணியாளர்களிடம், தனி தனியாக குப்பைகளை கொடுக்கணும்; அவர்களும் தனி தனியாக குப்பைகளை வாங்கி, வாகனத்தில் கொட்டி எடுத்து செல்வர். இதில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படும். மக்காத குப்பை மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும்,'
இதுதான், இதுவரை நடைமுறையில் இருந்து வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்.
நடைமுறையில் இல்லை
இத்திட்டத்தின் கீழ், உள்ளாட்சி நிர்வாகத்தினரால் வீடு வீடாக வழங்கப்பட்ட, சிவப்பு, பச்சை தொட்டிகள், இன்று வீடுகளில் காணவில்லை; அவற்றை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர் மக்கள்.
வீடு தேடி வரும் துாய்மைப் பணியாளர்களி டம், மொத்தமாக குப்பைகளை அள்ளி கொடுத்து விட்டு, வீடுகளில் சுகாதாரத்தை பேணி பாதுகாத்து கொள்கின்றனர்.மக்கும் குப்பை துவங்கி, மக்காத குப்பை வரை அனைத்தையும் மொத்தமாக அள்ளிச் செல்லும் ஊராட்சி துாய்மை பணியாளர்கள் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி, தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.
திருப்பூரில் பெரும்பாலான ஊரக, நகரப்பகுதிகளில், இப்படி தான் இருக்கிறது, திடக்கழிவு மேலாண்மை திட்டம்.இதுபோன்ற நிலையில். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேலும் திடப்படுத்த புதிய கொள்கையை வகுத்திருக்கிறது மத்திய அரசு.
என்ன செய்யலாம்?
''குப்பையை தரம் பிரிக்க இரண்டு தொட்டிகளே இல்லாத சூழலில், இனியும் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டிய நிலையை மக்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு, செய்வதால் இனியும் குப்பைகள் அதிகரிக்கத் தான் செய்யும்.
இதற்கு மாறாக, காலை, மாலை என, இரு நேரமும் குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பையை தனியாகவும், மக்காத குப்பையை தரம் பிரித்து, அவற்றை மறு சுழற்சிக்கு அனுப்பி வைப்பதன் வாயிலாக மட்டுமே குப்பையில்லா நகரை உருவாக்க முடியும்'' என்கிறார், குப்பையில்லா நகரை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தி வரும் திடக்கழிவு ஆலோசகர் வேலுார் சீனிவாசன்.

