/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஏ-டப்' திட்ட மானிய நிலுவை; கோவையில் சிறப்பு முகாம்
/
'ஏ-டப்' திட்ட மானிய நிலுவை; கோவையில் சிறப்பு முகாம்
'ஏ-டப்' திட்ட மானிய நிலுவை; கோவையில் சிறப்பு முகாம்
'ஏ-டப்' திட்ட மானிய நிலுவை; கோவையில் சிறப்பு முகாம்
ADDED : அக் 13, 2024 10:59 PM
திருப்பூர், : தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று, 'ஏ- டப்' திட்டத்தில், நீண்டகால நிலுவையை விடுவிக்க ஏதுவாக, கோவையில் 24 மற்றும் 25ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
ஜவுளித்தொழில் வளர்ச்சிக்காகவும், புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தவும் ஏதுவாக, தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் (டப்) மூலம், 15 முதல் 20 சதவீதம் வரை மானியம் வழங்கி, மத்திய அரசு ஊக்குவித்தது. பின், சிறிய மாற்றங்களுடன் 2016 முதல், 'ஏ - டப்' என்ற பெயரில், திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல்வேறு 'ஜாப் ஒர்க்' பிரிவினரும், இத்திட்டத்தால், இறக்குமதி இயந்திரங்களுக்கு மானிய உதவி பெற்று பயனடைந்தனர். இத்திட்டம், கடந்த, 2022 மார்ச் 31 உடன் நிறைவடைந்தது; தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தும் நீட்டிக்கப்படவில்லை.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, 'ஏ-டப்' திட்டத்தில், மானியம் நிலுவையாக இருக்கிறது. கடந்த மாதம், கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவையில் உள்ள, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழக (சிட்ரா) அலுவலகத்தில், 24, 25ம் தேதிகளில், இதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலில் மட்டும், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, 25 கோடி ரூபாய் வரை நிலுவை வர வேண்டியுள்ளது. மானிய நிலுவை இருப்பவர்கள், உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று, 'ஏ-டப்' திட்ட நிலுவையை பெற விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.