ADDED : அக் 18, 2024 06:33 AM

திருப்பூர், : தொடர் மழை காரணமாக நொய்யல் ஆறு மற்றும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், நகரப் பகுதியில் உள்ள மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால்களிலும் நீர் வழக்கத்தை விட அதிகளவில் செல்கிறது.
திருப்பூரில் உள்ள ரோடுகள், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியும் நிற்கிறது.
இது போல் தேங்கி நிற்கும் நீர் மற்றும் நீர் வழிப்பாதைகளில் அதிகரித்து வரும் புதிய நீர் போன்ற காரணங்களால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவுதல், கொசு உற்பத்தி ஆகியன ஏற்படும் நிலை உள்ளது.
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் மருத்துவ உதவி மற்றும் மருந்து தெளிப்பு போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
மாநகராட்சி 58வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வசந்தம் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற் பட்டுள்ளது.
இதையடுத்து, அப் பகுதியில் அனைத்து வீதிகளிலும் வீடுகள் தோறும் கொசு மருந்து புகை அடிக்கும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அனைத்துப் பகுதியிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ பரி சோதனை செய்து கொள்ள மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.