ADDED : ஜூலை 13, 2025 01:17 AM

பள்ளியில் சட்ட விழிப்புணர்வு
திருப்பூர், செல்லப்பபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைபள்ளியில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மங்கை பாரதி பதிப்பகம் கந்தசுவாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி பேசினார். அதில், புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியை சுமதி, எளிமைப்படுத்தப்பட்ட சட்டம் செயல்முறைகள் குறித்து பேசினார். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
தீ விபத்து: பா.ஜ.,வினர் உதவி (படம்)
திருப்பூர், கல்லாங்காடு, எம்.ஜி.ஆர்., நகரில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 32 வீடுகள் தரைமட்டமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமயைில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, அரிசி, பாய், குடம், பக்கெட், துணி உட்பட, 20 பொருட்கள் அடங்கிய 'கிட்' வழங்கப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் அருண், மாநில செயலாளர் மலர்கொடி, தேசிய செயற்குழு உறுப்பினர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
திருப்பூர் மெரிடியன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவிமயேற்பு விழா, காந்தி நகர் ரோட்டரி சங்க வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக சரவணன், பொருளாளராக சுரேஷ் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் சிவசங்கரன், சிறப்பு விருந்தினராக சக்தி நல்லசிவம், துணை கவர்னர் அம்பி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
ரயில் இயக்க நேரம் மாற்றம்
கோவையில் சிக்னல் பராமரிப்பு பணி நடப்பதால், டாடாநகர், தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. வரும், 15 மற்றும், 17ம் தேதி, எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் டாடாநகர் எக்ஸ்பிரஸ் (எண்:18190) போத்தனுார் - இருகூர் வழியில் பயணிக்காது; கோவை ஜங்ஷன் சென்று, அங்கிருந்து திருப்பூருக்கு வரும். அதே நேரம், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352) மேற்கண்ட நாட்களில் வழக்கமாக வழித்தடமான கோவை ஜங்ஷன் செல்லாது. மாற்று வழித்தடமான பாலக்காடு - இருகூர் வழியில் பயணிக்கும். ரயில் பயணிகள் வசதிக்காக இரு நாள் மட்டும் மதியம், 12:17 மணிக்கு போத்தனுாரில் ஒரு நிமிடம் நின்று, அதன் பின் திருப்பூர் வரும்.
கல்வி அலுவலர் மாற்றம்
பள்ளிக்கல்வி பணி விதிகளின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அது சார்ந்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும், 25 பேரை மாநிலம் முழுதும் மாற்றி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்க பள்ளிகளுக்கான, திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக இருந்த பழநி, ராணிப்பேட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.