/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குப்பையில்லா ஊராட்சி' கனவாகவே கலைகிறது
/
'குப்பையில்லா ஊராட்சி' கனவாகவே கலைகிறது
ADDED : ஏப் 29, 2025 07:01 AM
திருப்பூர்:
'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் குப்பையில்லா நகரை உருவாக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வீடு, வீடாக குப்பை சேகரித்து, அவற்றை குப்பைக்குழியில் கொட்டும் பணியும், பல இடங்களில் குவியும் குப்பைகளில் குறிப்பிட்ட அளவு குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து உரம், மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் பணிகள் நடக்கிறது; இருப்பினும், இப்பணிகள் நுாறு சதவீதம் நடப்பதாக தெரியவில்லை.
கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை குப்பை கொட்ட இடமில்லாததால், வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மேலாண்மை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ள துாய்மைப்பணியாளர்கள் இல்லாததால், மக்கள், சாலையோரங்களில் குப்பைகளை வீசுகின்றனர். இதனால், புதிய, புதிய இடங்கள் குப்பை கொட்டும் இடமாக மாறுகிறது. இதை தடுக்க, அத்தகைய இடங்களில், 'இங்கு குப்பைக் கொட்ட கூடாது' என்ற அறிவிப்பு பலகையை, அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் வைக்கின்றன. மாவட்ட நிர்வாகம், நகர்புற, ஊரக உள்ளாட்சிகளை ஒன்றிணைத்து, திடக்கழிவு மேலாண்மை பணியில் கவனம் செலுத்துவது அவசியம்.

