/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்டக்டர் இல்லாமல் பயணித்த அரசு பஸ்; காங்கயத்தில் இப்படியும் ஒரு கூத்து
/
கண்டக்டர் இல்லாமல் பயணித்த அரசு பஸ்; காங்கயத்தில் இப்படியும் ஒரு கூத்து
கண்டக்டர் இல்லாமல் பயணித்த அரசு பஸ்; காங்கயத்தில் இப்படியும் ஒரு கூத்து
கண்டக்டர் இல்லாமல் பயணித்த அரசு பஸ்; காங்கயத்தில் இப்படியும் ஒரு கூத்து
ADDED : ஜன 20, 2024 02:25 AM
திருப்பூர்:காங்கயம் பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்ட அரசு பஸ், கண்டக்டர் இல்லாமல் சில கி.மீ., பயணித்தது. இதனை பார்த்து, பயணிகள் வியப்படைந்தனர்.
பழநியிலிருந்து காங்கயம் வழியாக ஈரோடுக்கு செல்லும் அரசு பஸ், (டிஎன்.39.என்.0117) நேற்று முன்தினம் மாலை 7:10 மணிக்கு காங்கயம் பஸ் ஸ்டாண்ட் வந்தது. ஐந்து நிமிடத்துக்குப் பின் அந்த பஸ், பயணிகளை ஏற்றிக் கொண்டு, ஈரோடு நோக்கிப் புறப்பட்டது.
கண்டக்டர் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றவர் வந்து சேரவில்லை. அதற்குள் டிரைவர் பஸ்சை கிளப்பி விட்டார். காங்கயத்தில் அந்த பஸ்சில் ஏறிய, நத்தக்காடையூர் செல்லும் பயணிகள் டிக்கெட் வாங்க கண்டக்டரை தேடிய போது அவர் பஸ்சுக்குள் இல்லை என்பது தெரிந்தது.
பயணிகள் இது குறித்து டிரைவரிடம் கூறியதால், ஆறு கி.மீ., கடந்து மடவிளாகம் அருகே பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தினார். அதற்குள் காங்கயம் பஸ் ஸ்டாண்டில் தவித்த கண்டக்டர், டிரைவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதன்பின், அருகிலுள்ள கடைக்காரர் உதவியுடன் டூவீலரில் வந்த கண்டக்டர் பஸ்சில் ஏறி, பயணிகளுக்கு டிக்கெட் வினியோகம் செய்த பின், பஸ் அங்கிருந்து புறப்பட்டது. தொலை துார பஸ்கள் இடைப்பட்ட பகுதியில் ஓய்வுக்கு நின்று புறப்படும் போது, வழக்கமாக ஏதாவது பயணிகளை விட்டு விட்டு புறப்பட்டு விடுவது சகஜமாக நடக்கும். ஆனால், கண்டக்டரையே விட்டுவிட்டு அரசு பஸ் புறப்பட்டுச் சென்ற வினோத சம்பவம் காங்கயத்தில் நடந்துள்ளது.