/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றமிகு சிந்தனைகள் எண்ணிலடங்கா மகாகவிஞன்
/
ஏற்றமிகு சிந்தனைகள் எண்ணிலடங்கா மகாகவிஞன்
ADDED : டிச 09, 2024 11:44 PM
பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி நம்முடன் பகிர்ந்தவை:
சமீபத்தில் வெளியான 'அமரன்' திரைப்படத்தில், ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன், பாரதி படைத்த 'அச்சமில்லை, அச்சமில்லை' பாடல் வரிகளை, ராணுவ வீரர்களுடன் இணைந்தும், தனது குழந்தைக்கும் சொல்வதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது, ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. 'சூரரைப் போற்று' என்ற பாரதியின் ஆத்தி சூடி தலைப்பில் திரைப்படம் கூட எடுத்திருந்தனர். 'ஒரு நாடு எப்போதும் இளமையாக இருக்க வேண்டும்' என பாரதி விரும்பினார்.
'யவ்வனம் காத்தல் செய்' என்பதும் பாரதியின் ஆத்தி சூடி. 'யவ்வனம்' என்பதற்கு இளமை என்று பொருள். நம் நாடு என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்பதை தான் அவர் குறிப்பிடுகிறார். கைத்தொழில், விவசாயம் என, அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேறி, எவ்விதப் பற்றாக்குறையும் இருக்கக்கூடாது. நேர்மையான நிர்வாகம் இருக்க வேண்டும். இவையெல்லாம் தான் ஒரு நாட்டை இளமையோடு வைத்துக் கொள்ளும் என குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோன்று எண்ணற்ற விஷயங்களை ஆத்தி சூடியில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாரதியின் ஆத்திசூடி, இன்றளவும் சமுதாயத்துக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. இதை உணர்ந்து தான், பாரதியின் ஆத்திசூடிக்கு விளக்கவுரை எழுதியுள்ளேன்.பாரதியை, ஒரு கவிஞன் என்ற வட்டத்துக்குள் சுருக்கி விட்டோம். ஆனால், அவரது அறிவு எவ்வளவு விசாலமானது என்பதை, அவரது கட்டுரையை படிக்கும் போது உணர முடிகிறது. உலக அரசியல், அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதாரம், நிதி என, அனைத்து துறைகளிலும் ஆர்வமிக்கவராக இருந்தார். அவரது ஆத்திசூடியின் ஒவ்வொரு தலைப்பும் பல்வேறு விஷயங்களை விளக்குகிறது.

