ADDED : மார் 09, 2024 08:02 AM
திருப்பூர் : வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மனித சக்தி நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலையளித்து, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் மனித சக்தி நாட்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
துவக்கத்தில், கிராமங்களில் உள்ள குளங்களை துார் வாருவது உள்ளிட்ட மண் வேலைகளை செய்து வந்த, தொழிலாளர்கள், தற்போது, வேளாண் துறைக்கான பண்ணை குட்டை வெட்டுவது, கிணறு வெட்டுவது, தென்னை மரங்களை சுற்றி பாத்திக்கட்டுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பல்லடம் ஒன்றியம் உள்ளிட்ட பெரும்பாலான ஒன்றியங்களில், நுாறு நாள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மனித சக்தி நாட்கள் முடிந்துவிட்டதாக கூறி, திட்டம் நிறுத்தப்பட்டுஉள்ளது.
தொடர்ந்து, அத்திட்டத்தின் கீழ் பணி செய்தால், சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு பெற முடியாது என்பதால், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அசோக்குமார் கூறுகையில், 'நுாறு நாள் வேலை திட்டம் திடீரென நிறுத்தப்பட்டு விட்டதால், இந்த வேலை, அதன் வாயிலாக கிடைத்த தினசரி சம்பளம், 260 முதல், 280 ரூபாய் சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்த தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வேலையிழந்த பலர், அருகேயுள்ள விவசாய தோட்டங்களில், விவசாய தொழிலாளர்களாக பணிக்கு செல்ல துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி, வரும், நாட்களில், திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும்,'' என்றார்.
ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறுகையில், 'ஒதுக்கப்பட்ட மனித சக்தி நாட்கள் முடிந்துவிட்டதால், வேலையை நிறுத்தி சொல்லி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு முடிந்து, அதாவது, அடுத்த நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி, அதனடிப்படையில் ஒதுக்கப்படும் மனித சக்தி நாட்கள் அடிப்படையில் ஊராட்சிகளுக்கு பணி பகிர்ந்தளிக்கப்படும்' என்றனர்.
