கும்மிருட்டில் திக்... திக்... பயணம் செஞ்சேரிமலை ரோட்டில் பரிதவிப்பு
கும்மிருட்டில் திக்... திக்... பயணம் செஞ்சேரிமலை ரோட்டில் பரிதவிப்பு
ADDED : பிப் 26, 2026 05:53 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த செஞ்சேரிமலையில், பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. பண்டிகை, விழா காலங்களில், ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் செஞ்சேரிமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தென்னை விவசாயம் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. வாகன போக்குவரத்து நிறைந்த இப்பகுதிக்கு செல்லும் ரோடு, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாவிபாளையம் -- செஞ்சேரிமலை செல்லும் ரோட்டில், தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் ரோட்டில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
வழியில் உள்ள தோட்டங்கள், குடியிருப்புகள் தான் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு ஆறுதல் தருகிறது. இவ்வழியில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் திகில் பயணத்தை தான் மேற்கொள்கின்றனர்.
கும்மிருட்டு காரணமாக, குழிகள், பள்ளங்கள் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. முக்கியமாக, திருட்டு வழிப்பறி நடக்கவும் இது சாதகமாகவும் அமையும்.
எனவே, தெருவிளக்குகள் அமைத்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
