ADDED : ஜூன் 25, 2025 11:41 PM

திருப்பூர்; திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மங்கலம் ஊராட்சி; மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளதால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மொத்தம், 15 வார்டுகளை கொண்ட மங்கலம் ஊராட்சியில், துாய்மை பணியாளர்கள், வீடு வீடாக குப்பை சேகரிக்கின்றனர்.
சேகரிக்கப்படும் குப்பை, எவ்வித திட்டமும் இல்லாமல், காலியிடங்களில் கொட்டப்படுகிறது. சில இடங்களில் மழைநீர் செல்லும் நீரோடைகளில் குவிக்கப்படுகிறது. குறிப்பாக, மங்கலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்படுவது, இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மங்கலம் - அவிநாசி ரோட்டில், நொய்யல் ஆற்று பாலத்தின் மேற்கு பகுதியில், நொய்யல் கரையை ஒட்டியுள்ள இடத்தில், ஒட்டுமொத்த குப்பையும் மலைபோல் குவிக்கப்படுகிறது. நொய்யல ஆறு மட்டுமின்றி, ஆண்டிபாளையம் குளத்துக்கு வரும் வாய்க்காலிலும், மங்கலம் ஊராட்சி குப்பை கலக்கும் அபாயம் உள்ளது.
அதிக அளவு குப்பை குவிக்கப்படுவதால், காற்று பலமாக வீசும் போது, பிளாஸ்டிக் கழிவு காற்றில் அடித்துச்சென்று, நொய்யலில் கலக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, இறைச்சிக்கழிவு கொட்டுவதால், அவிநாசி ரோட்டில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றோரம் குப்பை கொட்டுவது கடும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குமென மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
---
மங்கலம் நொய்யல் ஆற்றங்கரையில் குவிக்கப்பட்டுள்ள குப்பை 'மலை'.