/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் விரிவாக்க மைய எல்லை சீரமைப்பு; கிடப்பில் போட்ட பல ஆண்டு கோரிக்கை
/
வேளாண் விரிவாக்க மைய எல்லை சீரமைப்பு; கிடப்பில் போட்ட பல ஆண்டு கோரிக்கை
வேளாண் விரிவாக்க மைய எல்லை சீரமைப்பு; கிடப்பில் போட்ட பல ஆண்டு கோரிக்கை
வேளாண் விரிவாக்க மைய எல்லை சீரமைப்பு; கிடப்பில் போட்ட பல ஆண்டு கோரிக்கை
ADDED : பிப் 12, 2024 11:21 PM
உடுமலை;வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை, நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை பல ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் கட்டுப்பாட்டில், 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.
ஒவ்வொரு சீசனிலும், நெல், கரும்பு, மக்காச்சோளம், தானியப்பயிர்கள், எண்ணெய் வித்து, பருத்தி உட்பட சாகுபடிகள், பல ஆயிரம் ஏக்கரில், மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், சாகுபடிக்கான தொழில் நுட்ப ஆலோசனைகள், மானியத்திட்டங்கள் ஆகியவற்றை பெற, விவசாயிகள் உடுமலைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
கல்லாபுரம், தேவனுார்புதுார் போன்ற தொலைதுார பகுதிகளிலிருந்து, விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்திற்கு வர முடியாத சூழல் உள்ளது.
இதனால், உடுமலை வேளாண் விரிவாக்க மையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தொலை துார கிராமங்களுக்காக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையங்களும், அலுவலர்கள் இல்லாமல் முடங்கியுள்ளன.
உடுமலை வேளாண் விரிவாக்க மையத்திற்குட்பட்ட, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் மையத்துக்கு, அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. கட்டடங்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
பி.ஏ.பி., மண்டல பாசனத்தில், உடுமலை பகுதியில், பல ஆயிரம் ஏக்கரில் பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இத்தகைய தருணங்களில், கிராமங்களில், தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சியளித்தால், விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இத்தகைய வேளாண்துறை திட்டங்கள் எளிதாக சென்று சேரும் வகையில், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை சீரமைப்பது அவசியம் என, உடுமலை பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, எரிசனம்பட்டியை தலைமையிடமாக கொண்டு, ஒன்றியம் அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் பரிசீலனையில் இருந்தது.
புதிய ஒன்றியம் உருவாக்கப்பட்டால் அதோடு, வேளாண் விரிவாக்க மையமும் புதிதாக ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.