ADDED : நவ 28, 2024 05:47 AM
உடுமலை; தேசிய நெடுஞ்சாலையின் மழை நீர் வடிகால் அமைப்புகள், குப்பை கிடங்காக மாற்றப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மழைக்காலங்களில், போக்குவரத்தும் பாதிக்கிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உடுமலை நகரம் வழியாக செல்கிறது. நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நகர எல்லையிலுள்ள, ராஜவாய்க்கால் பள்ளம், ராகல்பாவி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில், கட்டட கழிவுகள், மழை நீர் வடிகால் அமைப்புகளில் கொட்டப்படுகிறது.
ரோட்டோரத்தில் வடிகால் அமைப்பு பல கி.மீ., தொலைவுக்கு முற்றிலுமாக காணாமல் போயுள்ளது. இதனால், மழைக்காலங்களில், மழை நீர் வடிய இடமில்லாமல், ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறு பாலங்களின் குழாய்களும் அடைபட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வடிகால் அமைப்புகளை துார்வாரி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீட்காவிட்டால், வெள்ளநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடி, போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.