/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ஒன்றிய மக்களின் தாகம் தணியும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கியாச்சு
/
திருப்பூர் ஒன்றிய மக்களின் தாகம் தணியும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கியாச்சு
திருப்பூர் ஒன்றிய மக்களின் தாகம் தணியும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கியாச்சு
திருப்பூர் ஒன்றிய மக்களின் தாகம் தணியும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கியாச்சு
ADDED : பிப் 14, 2024 01:44 AM

திருப்பூர்:திருப்பூர் ஒன்றியத்தின், 10 ஊராட்சி மக்களுக்கு, 2050ம் ஆண்டு வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், 70.43 கோடி ரூபாய் மதிப்பிலான, கூட்டுக்குடிநீர் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரை ஒட்டியுள்ள, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், வடக்கே உள்ள 10 ஊராட்சி மக்கள், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டனர். கடந்த, 2000வது ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், 3வது குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கணக்கம்பாளையம் மற்றும் பொங்குபாளையம் ஊராட்சிகளுக்கு, 2வது திட்டத்தில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்று தண்ணீர் வழங்கப்படுகிறது; பட்டம்பாளையம், சொக்கனுார், மேற்குபதி, தொரவலுார், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், காளிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகளுக்கு, 3வது திட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
கடைக்கோடி கிராமம் என்பதால், ஒதுக்கீடு செய்த அளவுக்கு, தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. ஆழ்துளை கிணற்று தண்ணீரை கொண்டு, மக்களின் தேவை பூர்த்தியாகி வருகிறது. கடந்த, 2009 முதல் இப்பிரச்னை இருந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2020ம் ஆண்டு பிப்., மாதம், பவானி ஆற்று தண்ணீரை கொண்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
165 குடியிருப்பு
பத்து ஊராட்சி மக்களுக்கும் பயன்பெறும் வகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எடுத்து வரும், பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு, 165 குடியிருப்பு பகுதிகள் பயன்பெறும் வகையில், கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது.
கூட்டுக்குடிநீர் திட்டம்
அவிநாசியில் இருந்து தண்ணீரை எடுத்துவந்து, பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள தரைமட்ட தொட்டியில் தேக்கி, அங்கிருந்து, 10 ஊராட்சிகளுக்கும் தரமான, சுவையான குடிநீர் வினியோகம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டத்தில் தண்ணீர் வினியோகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நடந்த விழாவில், 70.43 கோடி ரூபாய் மதிப்பிலான, 165 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டமும் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதுகுறித்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூர் ஒன்றியத்தின், 165 குடியிருப்பு பகுதிகளுக்காக, 70.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில், 10 ஊராட்சிகளை சேர்ந்த, 60 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்; தலா, 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
இத்திட்டம், 2035ல், 90 ஆயிரம் மக்களுக்கும், 2050ம் ஆண்டில்,1.34 லட்சம் மக்களும் பயன்பெறும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ளது. பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள, 2.50 லட்சம் லிட்டர் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்படும்.
அங்கிருந்து, 156 கி.மீ., துாரமுள்ள, மூன்று நீருந்து குழாய் மூலமாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள, ஒன்பது தரைமட்ட தொட்டிகள்; ஏற்கனவே உள்ள, ஐந்து தொட்டிகள் என, 14 தொட்டிகளுக்கு வினியோகிக்கப்படும். அதிலிருந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 50 மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, 99.20 கி.மீ., துாரம் பதித்துள்ள பகிர்மான குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். இத்திட்டத்தில், தற்போது, தினமும், 1.26 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

