/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூளிக்குளத்துக்குப் பாயாத புது வெள்ளம்
/
மூளிக்குளத்துக்குப் பாயாத புது வெள்ளம்
ADDED : அக் 24, 2025 12:11 AM

திருப்பூர்: நொய்யலில் பெருக்கெடுக்கும் புது வெள்ளம், மூளிகுளத்துக்கு பாய ராஜவாய்க்காலில் அடைப்புகளை நீக்கி, கழிவுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை அருகேயுள்ள மூளிக்குளம். 21 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீர் ஆதாரமாக நொய்யல் உள்ளது. கனமழை பெய்யும் போது, குளத்தின் நீர்மட்டம் உயர்ந்தாலும், ஒவ்வொரு பருவமழையின் போது நொய்யலில் பெருக்கெடுக்கும் புதுவெள்ளம், அணைக்காடு - ராஜவாய்க்கால் - கருமாரம்பாளையம் வழியாக பயணித்து, குளத்தை அடையும்.
சுத்தமான வெள்ள நீர் வந்து கலப்பதால், தண்ணீர் மாசு இல்லாமல், பறவையினங்கள் வந்து செல்லும் இடமாக மெல்ல மாறி வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலை, கோவை சுற்றுவட்டார பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக கோவையில் இருந்து நொய்யல் ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.
மழைக்கு முன்னதாக, அணைக்காடு தடுப்பணை, கால்வாய் நீர்பாயும் பகுதிகள் முழுமையாக துாய்மைப்படுத்தப்படவில்லை. அப்படியே விடப்பட்டுள்ளதால், மண், செடி, கொடிகள் நிறைந்து, அடர்ந்து காணப்படுகிறது. பெயரளவுக்கு நீர் கால்வாயில் செல்கிறதே தவிர, அணைக்காடு அருகே ஷட்டர் முழுமையாக திறந்து, தண்ணீர் வேகமாக பாய்ந்தோடி, குளத்தை சென்றடையவில்லை. அடுத்த மழை - வெள்ளம் வரும் முன்பு, மூளிகுளத்துக்கு நீர் கொண்டு செல்லும் ராஜவாய்க்காலை முழுமையாக அடைப்புகளை நீக்கி, உடனடியாக சுத்தப்படுத்திட வேண்டும்.

