/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குற்றமில்லாத சமுதாயம்' உருவாக்க புதிய திட்டம்
/
'குற்றமில்லாத சமுதாயம்' உருவாக்க புதிய திட்டம்
ADDED : அக் 03, 2024 05:41 AM

திருப்பூர்,: திருப்பூரில், 'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' (குற்றமில்லாத சமுதாயத்தை உருவாக்குதல்) என்ற புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குழந்தைகள் துன்புறுத்தப்படுதல், போதை பொருளுக்கு அடிமையாதல் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு முன்னெடுப்புக்கான குற்றமில்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், திருப்பூர் மாநகரில் இருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நல்வழி காட்டும் நோக்கில் கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை துவக்கி உள்ளனர்.
இத்திட்டம் துவக்க விழா மற்றும் 'லோகோ' வெளியீடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், 'லோகோ' வை வெளியிட்டு துவக்கி வைத்தார். போலீஸ் கமிஷனர் லட்சுமி, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் அசோக் கிரிஷ் யாதவ், சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெற்றோர், ஆசிரியர்களுக்கு பொறுப்பு
போலீஸ் கமிஷனர் லட்சுமி பேசியதாவது:
குழந்தை பருவம் அமைதியானதாகவும், ஆனந்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். தவறான வழிகளில் சென்று குற்றங்களால் பாதிக்கப்படவும் கூடாது, சிக்கிக்கொள்ளவும் கூடாது. அவர்களுக்கு மனநலத்தையும், உடல்நலத்தையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளுக்கும் உண்டு.
நாம் அனைவரும், இரண்டாவது பெற்றோர். வாழ்க்கை என்பது போர்க்களம், அனைத்தையும் சந்திக்க வேண்டும். அவர்களை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. குடும்பம் என்ற அடிப்படை அமைப்பு நன்றாகவும், தனி மனித ஒழுக்கம் உள்ள குடும்பம், சமுதாயத்தில் நன்றாக இருக்கும். எந்தவொரு பிரச்னைக்கும், என் குடும்பத்தில் தீர்வு கிடைக்கும் என்று குழந்தைக்கு நம்பிக்கை வரும் போது, தவறான வழியில் சென்று சிக்கி கொள்ள மாட்டார்கள்.
குடும்பத்தில் இருந்து சமுதாய மாற்றம்
சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டும் என்றால், அந்த மாற்றம் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒழுக்கம் நிறைந்த குடும்பம், மனிதர்கள் சமூகத்துக்கு வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' திட்டம், கலெக்டருடன் கலந்து ஆலோசித்து உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளது. அனைத்து குற்றங்களையும் களைய, தனிப்படை உள்ளது.
அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி கைது நடவடிக்கை இருந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. குழந்தைகளுக்கு சொல்லக்கூடியவற்றை, பெற்றோர்களுக்கு கூற முடியாது. இதனால், மூன்று பிரிவாக நாங்கள் பிரித்துள்ளோம். இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்கள் ஆகியோர் அந்தந்த பள்ளி, கல்லுாரி மற்றும் பெற்றோர் மத்தியில் அனைத்து விதமான குற்றங்கள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான கவுன்சிலிங் வழங்க, கலெக்டர் அலுவலகத்தில், இரண்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தினரை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்றைக்கு குடும்பத்தில் இல்லை. குழந்தைகளிடம் உள்ள மாற்றம் வெளி உலகத்துக்கு தெரியாமல் மறைக்கும் போது, அந்த குழந்தை வெளியே வந்து விடுகிறது. இதுபோன்ற குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு பெற்றோருடன் சேர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்படும்.
இதற்காக, போலீஸ் கமிஷனர், கலெக்டர் ஆகியோர் அடங்கிய கமிட்டி, கல்லுாரி முதல்வர், துணை கமிஷனர்கள், டி.ஆர்.ஓ., என, பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. விழிப்புணர்வு செய்ய அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் களைவதே நோக்கம்
இத்திட்டத்தின் நோக்கம், குற்றமே இருக்கக்கூடாது. குற்றங்கள் சாதாரணமாக நடப்பதில்லை.
அந்த குற்றம் எப்படி உருவாகுகிறது என்பதை கண்டறிந்து களைவது தான் நோக்கம். அனைவரும் ஒன்று சேர்ந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக, மூன்று மாதம் ஒரு முறை ஆலோசனை நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
----------------------------
கலெக்டர் கிறிஸ்துராஜ்:
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்னைகளில் இருந்து மீண்டு வர உரிய ஆலோசனை வழங்குவதும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுசாமி:
------------------------------------------------
ஒரு மனிதன் நோய்வாய்வாய்பட்டு இருக்கும் போது, சக மனிதன் காப்பாற்றி, உதவி செய்வான். இந்த சேவை தான் நாகரிகமானது. சேவையுடன் ஒரு செயல்பாடு இருக்கும் போது நாகரிகமான சமுதாயமாக மாறும். ஒருவர் பாதிக்கப்பட்டு நம்மை நாடும் போது, அவர்களிடம் கேள்விகளை கேட்டு சிரமப்படுத்தாமல், அவர்களை மென்மையாக கையாள வேண்டும்.
குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல பாதிப்புகள், அவர்கள் பெரியவர்கள் ஆனாலும், உள்ளார்ந்த பாதிப்பு இருக்கும். கவுன்சிலிங் கொடுக்கும் போது, அவர்களுக்கு எந்த இடத்தில் பிரச்னை உள்ளதை என்று ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.
சொல்ல நினைத்த கதை
-------------------
வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா பேசியதாவது:
இத்திட்டம் உதயமாவதற்கு கமிஷனர் தான் முக்கிய காரணம். அன்றாடம் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அவர் பார்வைக்கு செல்லும் போது, அந்த குற்றம் நடந்ததற்கான காரணம், பின்னணி குறித்து கேட்டு விசாரிப்பார். இப்பிரச்னைகளை போலீஸ் அதிகாரியாக பார்க்காமல், சமூக அக்கறையுடன் பார்த்ததால் தான், இத்திட்டம் வந்தது. இதனை நல்லமுறையில் சிறப்பாக செயல்பட்டு குற்றங்கள் இல்லாத மாநகரமாக மாற்ற வேண்டும்.
ஒரு சிறிய நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நடுத்தர குடும்பம் தந்தை, தாய், மகன், மகள் என, நான்கு பேர் வாழ்ந்து வந்தனர். தந்தை ரொம்ப கண்டிப்பனவர். இச்சூழலில், வீட்டுக்கு உறவினர்கள் வருகின்றனர். இதனால், சிறிய வயதில் உள்ள மகன், மகளுக்கு ரொம்ப சந்தோஷம், உறவு குழந்தைகளுடன் விளையாடுகின்றனர்.
இரண்டு நாள் கழிந்த பின், மூன்றாம் நாள் அனைவரும் சினிமாவுக்கு போக திட்டமிட்டு கிளம்புகின்றனர். ஆனால், பெண் குழந்தைக்கு வீட்டுப்பாடம் உள்ளதாக கூறி, அவரது தந்தை செல்ல அனுமதிக்கவில்லை. அழைத்து செல்வதாக கூறியும், தந்தை அனுமதிக்கவில்லை. அனைவரும் கிளம்பி சென்றனர். வழக்கமாக, இதுபோன்ற சூழலில் மற்ற குழந்தைகள் அழுக செய்வார்கள்.
ஆனால், அந்த குழந்தை எந்த வித அடம்பிடிக்கவில்லை, அமைதியாக இருந்தது. அனைவரும் சென்ற நிலையில், குழந்தையை வீட்டுப்பாடம் செய்ய அறிவுறுத்தி விட்டு, அவர் உடனிருக்காமல், அவரது தந்தை பக்கத்து அறைக்கு துாங்க சென்றார். தனியாக அமர்ந்திருந்த குழந்தை நேராக சமையல் அறைக்கு சென்று, சிறிய கத்தியை எடுத்து கொண்டு, தந்தைபடுத்திருந்த அறைக்கு சென்று, கத்தியுடன் தயாராக நின்றிருந்தது.
லேசான வெளிச்சத்துடன், இருட்டாக இருந்த அறையில் துாங்கி கொண்டிருந்த தந்தை திடீரென விழித்தார். குழந்தை கத்தியுடன் இருப்பதை பார்த்து பதறி போனார். உடனே, தந்தை தனது தவறை உணர்ந்து, குழந்தையை சமாதனப்படுத்தி, தட்டி கொடுத்து, சினிமா முடிவதற்குள் அழைத்து சென்றார்.
ஒரு தகப்பனாக, அவர், குழந்தையை அனுப்பி வைத்திருக்க வேண்டும் அல்லது உடன் அமர்ந்து நேரத்தை செலவழித்து இருக்க வேண்டும். அச்சூழலில் இருந்த பெண் குழந்தை வேறு யாருமில்லை, நான் தான். குழந்தைகளின் எண்ணங்கள் மாறுவதற்கு, பெற்றோர் கையாளும் முறை தான். குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு பெரிய பங்கு உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.