/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால் நுாற்றாண்டை தொட்ட 'வெற்றி' பயணம்
/
கால் நுாற்றாண்டை தொட்ட 'வெற்றி' பயணம்
ADDED : ஜூன் 22, 2025 11:49 PM

திருப்பூர்: கால் நுாற்றாண்டைத் தொட்டது 'வெற்றி' அறக் கட்டளையின் பயணம்.
இயற்கை பாதுகாப்பின் மீது ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து, 2000ம் ஆண்டில், 'ஆண்டிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு' என்ற அமைப்பு துவங்கப்பட்டது.
முதல் கட்டமாக, திருப்பூர் நகராட்சியின், ஐந்து வார்டுகள், மங்கலம் ஊராட்சி பகுதிகளில், 2000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முடிவு செய்து, இரும்பு கூண்டுடன் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டது.
குமரன் கல்லுாரியை சுற்றியுள்ள எஸ்.ஆர்., நகர் பகுதிகளில், பசுமை பூத்துள்ள மரங்கள் அன்று நடப்பட்டவை. நிலத்தடி நீர் வேகமாக சரிந்துவந்த நிலையில், 60 ஆண்டுகளுக்கு மேலாக சிதைந்து போயிருந்த ஆண்டிபாளையம் குளத்தை துார்வார திட்டமிடப்பட்டது.
மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் இருந்து வரும் ராஜவாய்க்கால் கண்டறிந்து, மீட்டெடுக்கப்பட்டது. அடுத்துள்ள ஒட்டணை பெரும்பாலும் சிதிலமடைந்து அடையாளம் மாறிப்போயிருந்தது. பொதுப்பணித்துறை அனுமதியுடன், ஒட்டணை முழுவதும் சீரமைக்கப்பட்டு, நொய்யல் ஆற்றையொட்டி செல்லும் மற்றொரு வாய்க்காலும் கண்டறிந்து துார்வாரி தயார்படுத்தப்பட்டது.
கடந்த, 2000ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, ஆண்டிபாளையம் குளம் முதன்முதலாக நிரம்பியதை, சமுதாய விழாவாக கொண்டாடினர். அதற்கு பிறகு ஆண்டிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, 'வெற்றி' அறக்கட்டளையாக மாற்றம் பெற்றது.
குழந்தை வேலு நாச்சம்மாள் அறக்கட்டளை பங்களிப்புடன், 10 ஏக்கர் நிலத்தில், இடுவம்பாளையத்தில் தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளுடன், 2008ல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிக்கொடுக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்பட்டது.
திருப்பூர் சுற்றுப்பகுதி மக்களுக்கான சமூக பணிகளை செய்து வரும் வெற்றி அறக்கட்டளை, இந்தாண்டு, 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
வெற்றி அறக்கட்டளை, ஆண்டிபாளையம் குளத்தை பராமரித்து வருவதை பார்த்து, பல்வேறு அமைப்புகளும், ஆங்காங்கே உள்ள குளங்களை பராமரிக்க துவங்கியுள்ளன. கடந்த, 2013ல், 'குளம் காக்க குலம் வாழும்' என்பது போல், 220க்கும் அதிகமான அமைப்பினர் குளம் துார்வாரும் கரசேவையில் பங்கேற்றன. குளக்கரைகள் வலுப்படுத்தப்பட்டு, பறவைகளுக்கான இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டன; மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் சிறிய விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டது. கடந்த, 2015 முதல், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டத்தை துவக்கி பிறகுதான், 'வெற்றி' அமைப்பின் பணி வெளியே தெரிய வந்தது.
- கோபாலகிருஷ்ணன், கவுரவ தலைவர்,'வெற்றி' அறக்கட்டளை.