/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்துணர்ச்சி தந்த 'யோக மகோத்சவம்'
/
புத்துணர்ச்சி தந்த 'யோக மகோத்சவம்'
ADDED : பிப் 01, 2024 12:06 AM

பல்லடம் : பல்லடத்தில் மூன்று நாட்கள் நடந்த 'யோக மகோத்சவம்' நிகழ்ச்சி நிறைவடைந்தது. 'ஹார்ட்புல்னெஸ்' நிறுவனம், பல்லடம் விசைத்தறி உரிமையாளர் சங்கம் இணைந்து 'யோக மகோத்சவம்' எனப்படும் யோகா, தியான பயிற்சி முகாம் கடந்த மாதம் 28ம் தேதி பல்லடத்தில் துவங்கியது.
நேற்று முன்தினம், நிறைவு நாள் யோகா மற்றும் தியான பயிற்சி நடந்தது. விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி வரவேற்றார். அ.தி.மு.க., நகர செயலாளர் ராமமூர்த்தி, வடுகபாளையம்புதுார் ஊராட்சி தலைவர் புனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மூச்சு பயிற்சி, யோகாசனம் மற்றும் தியானம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். 'ஹார்ட்புல்னெஸ்' நிறுவனம் சார்பில் அதன் பயிற்சியாளர் மல்லீஸ்வரன் நன்றி கூறினார்.
மூன்று நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். 'யோக மகோத்சவம்' புத்துணர்வு அளித்ததாக, பங்கேற்ற பொதுமக்கள் கூறினர்.
அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.