திருப்பூர் ; பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நடந்த, அன்னாபிேஷக வழிபாட்டில், சிவபுராணம் பாராயணம் செய்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஐப்பசி மாத பவுர்ணமி நாளான நேற்று, சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைகள் வெகுவிமரிசையாக நடந்தன. மாலையில், மூலவருக்கு மகா அபிேஷகமும், அதனை தொடர்ந்து அன்னாபிேஷகமும் நடந்தது.
பச்சரிசி சாதம், காய்கறிகளை கொண்டு சிவலிங்கத்துக்கு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை செய்யப்பட்டது. இரண்டு மணி நேரம் வரை, அன்னாபிேஷக கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, அன்னாபிேஷகம் கலைத்து, அலங்கார பூஜையும், தீபாராதனையும் நடந்தது.
திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், செட்டிபாளையம் அருணாசலேஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிேஷக பூஜைகள் விமரிசையாக நடந்தன. ஏராளமான பக்தர்கள், அன்னாபிேஷக அலங்காரத்தை கண்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.