/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழைய குப்பை கிடங்கை அகற்றுவதால் நிம்மதி பெருமூச்சு! 'பயோ மைனிங்' முறையில் உரம் தயாரிப்பு
/
பழைய குப்பை கிடங்கை அகற்றுவதால் நிம்மதி பெருமூச்சு! 'பயோ மைனிங்' முறையில் உரம் தயாரிப்பு
பழைய குப்பை கிடங்கை அகற்றுவதால் நிம்மதி பெருமூச்சு! 'பயோ மைனிங்' முறையில் உரம் தயாரிப்பு
பழைய குப்பை கிடங்கை அகற்றுவதால் நிம்மதி பெருமூச்சு! 'பயோ மைனிங்' முறையில் உரம் தயாரிப்பு
ADDED : நவ 26, 2024 07:55 PM

உடுமலை; உடுமலை நகராட்சி, தாராபுரம் ரோடு பழைய குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகள் 'பயோமைனிங்' முறையில், ரூ. 2.13 கோடி செலவில் முழுமையாக அகற்றும் பணி துவங்கியுள்ளது.
உடுமலை தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு இருந்தது.
நகரம் வளர்ச்சியடையாத நிலையில், இங்கு கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. பின்னர் பெரியகோட்டை ஊராட்சி, புஷ்பகிரி வேலன் நகர், காந்திநகர் - 2, சிவசக்தி காலனி என, 20க்கும் மேற்பட்ட லே - அவுட்கள் உருவாக்கப்பட்டு, பல ஆயிரக்ணக்கான வீடுகள் உருவாகின.
இதனையடுத்து, நகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 20 ஆண்டுக்கு முன், கணபதிபாளையத்தில் குப்பைக்கிடங்கு மாற்றப்பட்டது. தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், உரமாக மாற்றப்படுவதால், கணபதிபாளையம் குப்பைக்கிடங்கும் மூடப்பட்டது.
ஆனால், தாராபுரம் ரோட்டிலுள்ள பழைய குப்பைக்கிடங்கில், குப்பைகள் அகற்றப்படாமல், பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளதோடு, துர்நாற்றம், சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சுற்றிலும் உள்ள குடியிருப்புகளைச்சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து நகராட்சி மற்றும் பெரியகோட்டை ஊராட்சியில் சேகரமாகும், குப்பை, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு, அவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், புகை மூட்டமாக அப்பகுதி மாறி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு தீர்வு காண வேண்டும், என இப்பகுதி மக்கள், 25 ஆண்டுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், தற்போது 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக அகற்றும் பணி துவங்கியுள்ளது.
'பயோ மைனிங்' திட்டம் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய, தொழில் நுட்பமாகும். உரக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள், நவீன இயந்திரங்கள் வாயிலாக கிளறி, இயந்திரத்தில் கொட்டப்படும்.
அதன் பின், பெரிய அளவிலான கன்வேயர் வாயிலாக, குப்பை செல்லும் போது, பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்படும்.
இதில், மக்கும் குப்பைகள் சலித்து இயற்கை முறையில் உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில், மறு சுழற்சிக்கு பயன்படும் குப்பைகள், முறையாக குவாரி குழிகளை நிரப்பவும், கட்டுமான பணிகள் என பயன்படுத்தப்படும்.
மறு சுழற்சிக்கு பயன்படாத மக்காத குப்பைகளான, பிளாஸ்டிக், துணி உள்ளிட்டவை தனியாக சேகரிக்கப்பட்டு, சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பாய்லர் எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு, தேங்கியுள்ள குப்பைகள் ஒவ்வொன்றும், நவீன முறையில் பிரிக்கப்பட்டு, குப்பை கிடங்கிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டு, வழக்கம் போல் நில பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே, கணபதிபாளையம் குப்பைக்கிடங்கிலிருந்து, கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது, பழைய குப்பை கிடங்கிலும் பயோமைனிங் முறையில், கழிவுகள் அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது, இங்கு, 19 ஆயிரம் டன் குப்பை தேங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டு, முழுமையாக அகற்ற, ரூ.2.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த, அக்., மாதம், இதற்கான இயந்திரங்கள் கொண்டு வந்து பொருத்தப்பட்டு, தற்போது ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
18 மாதம் திட்ட காலமாக கொண்டு, 2026 ஆக., 31ம் தேதிக்குள் முழுமையாக அகற்றப்பட்டு, குப்பை, கழிவுகள் இல்லாத, மைதானமாக மாற்றப்படும்.
அதற்கு பின், உடுமலை நகருக்கு என, அரசு விழாக்கள், பொழுது போக்கு அம்சங்கள் அமையும் வகையில் பொருட்காட்சி மைதானம், வணிக வளாகம், லாரிப்பேட்டை, பூ மார்க்கெட் என மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதன் வாயிலாக, 25 ஆண்டுக்கும் மேலாக, இப்பகுதியில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ள குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.