/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறிய குட்டையானது 'சின்னக்குட்டை'
/
சிறிய குட்டையானது 'சின்னக்குட்டை'
ADDED : பிப் 12, 2025 12:28 AM

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சி, கரடிவாவி புதுாரில் சின்னக் குட்டை உள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த குட்டை, ஆக்கிரமிப்புகள் காரணமாக, நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக, இப்பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த கோர்ட், நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவை பின்பற்றி, ஓராண்டுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாததால், குட்டையின் பரப்பளவு சுருங்கி உள்ளதாக, கார்த்திகேயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறைக்கு அவர் அளித்த புகார் மனுவில், அவர் கூறியிருப்பதாவது:
கரடிவாவி சின்னக்குட்டை, 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுமக்கள் புகாரால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடந்த கால ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் காரணமாக, குட்டையின் கரைகள், 60 அடி வரை உட்புறமாக கொண்டு செல்லப்பட்டு, குட்டைக்குள் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்களும் குட்டைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், ஆறு ஏக்கர் பரப்பளவு உள்ள குட்டை, நான்கு ஏக்கராக சுருங்கியுள்ளது. வருவாய்த் துறையினர், முறையாக அளவீடு செய்யாமலும், குட்டையை மீட்காமலும் உள்ளனர். எனவே, முறையான அளவீடு பணி மேற்கொண்டு, ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள குட்டையை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.