/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பா பருவ நெல் சாகுபடிக்கு ஆயத்தம்: நாற்றங்கால்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
/
சம்பா பருவ நெல் சாகுபடிக்கு ஆயத்தம்: நாற்றங்கால்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
சம்பா பருவ நெல் சாகுபடிக்கு ஆயத்தம்: நாற்றங்கால்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
சம்பா பருவ நெல் சாகுபடிக்கு ஆயத்தம்: நாற்றங்கால்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : அக் 26, 2025 11:28 PM

உடுமலை: உடுமலை, அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், அடியுரம், உயிர் உரங்கள் பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை எலையமுத்துார் பகுதிகளில், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நாற்றங்கால்கள் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளில், 150 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி, இயந்திர நடவு வாயிலாக மேற்கொள்ள நாற்றங்கால் அமைக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் நாகலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
எலையமுத்துார் பகுதியில் நெல் நாற்றாங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒரு சில பகுதிகளில் இலைப்புள்ளி நோய் தென்பட்டதால், மாங்கோ செப்,75 சதவீதம் மருந்தை, ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு, 4 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.
நெல் நாற்றுக்கு வயல் தயார் செய்யும் போது, அடியுரமாக ஏக்கருக்கு, 2 மூட்டை சூப்பர் பாஸ்பேட், 37.5 கிலோ யூரியா, 12.5 கிலோ பொட்டாஷ் உரங்கள் இட வேண்டும். மேலும், வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும்.
அரை லிட்டர் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சிங்க் பாக்டீரியா ஆகியவற்றை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
நடவுக்கு முன், ஏக்கருக்கு, 5 கிலோ நுண்ணுாட்டம், 10 கிலோ மணலுடன் கலந்து துாவி நடவு செய்ய வேண்டும். சூப்பர் பாஸ்பேட் அடியுரமாக இடும்போது, நாற்றுக்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து, பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
உயிர் உரங்கள் இடுவதன் வாயிலாக, சத்துக்களை பயிரின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் என்பதால், இந்த சாகுபடி தொழில் நுட்பங்களை நெல் நடவு செய்யும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.

