ADDED : மார் 03, 2026 05:48 AM

திருப்பூர்: பொதுத்தேர்வின் முதல் தேர்வான தமிழ் தேர்வு எப்போது எளிமையாக இருக்கும் நிலையில், நேற்று நடந்த பிளஸ் 2 தமிழ் தேர்வு ஒரு மதிப்பெண் வினாத்தாளில் தேர்வுத்துறை 'ட்விஸ்ட்' வைத்தது. அதே நேரம், முழுமையாக படித்திருந்தால், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற முடியும் என்கின்றனர், தமிழாசிரியர்கள்.
தமிழகம் முழுதும், பிளஸ் 2 தமிழ்தேர்வு நேற்று நடந்தது. மொழித்தாள் தேர்வு என்றாலே, சற்று எளிமையாக இருக்கும். ஆனால், ஒரு மதிப்பெண் வினா சற்று குழப்பியதாக மாணவர்கள் கூறினர்.
ரிதன்யா: படித்திருந்த பெரும்பான்மையான கேள்விகள் வினாத்தாளில் வந்திருந்தது. நான்கு மற்றும் ஆறு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண்ணில் ஒரு வினாவும், ஒரு மதிப்பெண்ணில் இரண்டு வினாவும் பாடங்களுக்குள் இருந்து கேட்டிருந்ததால், யோசித்து விடையளிக்க வேண்டியிருந்தது.
ஆகாஷ்: ஒரு மதிப்பெண் வினா சற்று யோசிக்க வைத்தது. மற்ற வினாக்கள் எளிமையாக உடனடியாக விடையெழுதும் வகையில் இருந்தது. முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இடம்பெற்றிருந்த கேள்விகள் மீண்டும் வந்திருந்தது. நேரத்தை திட்டமிட்டு ஒரு மதிப்பெண்ணுக்கு அதிக நேரம் எடுத்து கொள்ளாமல், தேர்வெழுதியிருந்தால், நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்.
---
