/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவர் இன்றி செயல்படும் கால்நடை மருந்தகம்
/
மருத்துவர் இன்றி செயல்படும் கால்நடை மருந்தகம்
ADDED : மார் 10, 2024 12:06 AM

பல்லடம்:சுல்தான்பேட்டை கால்நடை மருந்தகம், கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவர் இன்றி செயல்பட்டு வருகிறது.
பல்லடம் அருகே சுல்தான்பேட்டை பகுதியில், அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதில், 4 ஆண்டுகளாக மருத்துவர் இன்றி செயல்படுகிறது.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: சுல்தான்பேட்டை வட்டாரத்தில், அடிக்கடி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல்கள், பிரசவம், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக அரசு கால்நடை மருந்தகத்தை நாடுகிறோம். ஸ்கேனிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உள்ள இந்த கால்நடை மருந்தகத்தில், கடந்த நான்கு ஆண்டுக்கு மேலாக மருத்துவரே கிடையாது. கண்காணிப்பாளர் தான் சிகிச்சை அளித்து வருகிறார்.
அவ்வப்போது, கூடுதல் பொறுப்புடன் உதவி மருத்துவர்கள் வரும்போது, விவசாயிகள் மருந்தகத்துக்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அவசர காலகட்டங்களில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமலும் உள்ளது. அனைத்து வசதிகள் இருந்தும், உதவி மருத்துவர் இன்றி கால்நடை மருந்தகம் பெரிய அளவு பயன்பாடு இல்லாமல் உள்ளது. உடனடியாக மருத்துவரை நியமிக்க கால்நடை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோவை மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் பெருமாள்சாமியிடம் கேட்டதற்கு, ''கோவை மாவட்டத்தில், 10 உதவி மருத்துவர் காலிப் பணியிடங்கள் உள்ளன. கோர்ட் வழக்கு நடந்து வந்ததன் காரணமாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஓரிரு வாரங்களில் பணியிடம் நிரப்ப வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

