ADDED : அக் 07, 2024 01:22 AM
பல்லடம் அருகே 63 வேலம்பாளையம் கிராமத்தில் ஊருக்குப் பொதுவான காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, சிலர் அபகரிக்க முயற்சி செய்வதால், முறையான அளவீடு செய்து கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
ஓட்டு கட்டடமாக உள்ள கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த, செப்., மாதமே கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதே பகுதியைச் சேர்ந்த சிலர், கோவில் நிலத்தை அபகரிக்க முயன்று, கோவில் திருப்பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு செய்து, திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்த இயலாமல் போனது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் நோக்கில், வருவாய் துறையை அணுகினோம். ஆனால், சிலர் செல்வாக்கை பயன்படுத்தி, நிலத்தை அளக்கவிடாமல் தடுத்து வருகின்றனர்.
நிலத்தை முழுமையாக அளவீடு செய்து, அபகரிக்க நினைப்பவர்களிடம் இருந்து கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும். திருப்பணிகள் தடையின்றி மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்களிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் ஜீவா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
