ADDED : மார் 03, 2024 11:34 PM

திருப்பூர்;ஆதார் எண் உள்ளிட்ட விபரங்கள் செயல்பாட்டில் இருக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டு 'அப்டேட்' செய்ய வேண்டும். திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு புதிய பள்ளியில் இணைய உள்ள, ஒன்பது முடிந்து பத்தாம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்கள் தங்கள் ஆதார் கார்டு 'அப்டேட்' செய்ய பெற்றோருடன் தபால் நிலையத்தை நாடி வருகின்றனர்.
இதனால், கடந்த ஒரு வாரமாக தலைமை தபால் அலுவலகம் மாணவர், மாணவியர் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. அலுவலகமே சிறியதாக இருப்பதால், நிற்க இடமில்லாமல், வகுப்பறையில் அமர வைக்கப்பட்டுள்ளது போல், மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
தினமும், 60 முதல், 80 ஆதார் விபரங்களை மட்டுமே மாற்ற வசதி உள்ளது. இருந்த போதும் உடனடியாக எஸ்.எம்.எஸ்., வந்து, ஓரிரு நாளில் அப்டேட்டாகியும் விடுவதால், மாணவர், பெற்றோர் தபால் அலுவலகத்தையே நாடி வருகின்றனர்.
தபால்துறை கைவிரிப்பு
தலைமை தபால் அலுவலகத்தில் கூடுதலாக ஆதார் பணிக்கு அலுவலர் நியமித்து, மெஷின்களை புதியதாக தருவிக்கலாமே என்பது குறித்து, தபால் துறை அலுவலர்களிடமே கேட்டதற்கு, 'கல்வியாண்டு துவங்கும் போதும், நிறைவு பெறும் போது மட்டுமே இவ்வாறு மாணவர்கள் வருவர். மற்ற பத்து மாதமும் ஆதார் மையத்துக்கு குறைந்தபட்ச பயனாளர்கள் மட்டுமே வருவர். இருப்பினும், நிலையை எடுத்துக்கூறி, கூடுதல் பணியாளர், மெஷின் கேட்டுள்ளோம்,' என்றனர்.
