/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோக சங்கிலி பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
/
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோக சங்கிலி பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோக சங்கிலி பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோக சங்கிலி பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
ADDED : மே 24, 2025 05:51 AM

திருப்பூர் : ''பேரிடர் காலத்திலும் ஆவின் பால் வினியோக சங்கிலி பாதிக்கப்படாது,' என, அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பால் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களுக்கு இலவச தையல் மெஷின், பசுந்தீவன விதை, கால்நடை காப்பீடு, கறவை மாடு பராமரிப்பு கடன், கூட்டுறவு சங்கங்களுக்கு கம்ப்யூட்டர் என, 567 பயனாளிகளுக்கு, மொத்தம் ரூ. 82 லட்சத்து 47 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் பால் வளத்துறை, ஆவின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்களிடமிருந்தும், பால் உற்பத்தியாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கே மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து, அரசு அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது, பால் கொள்முதல் 1.80 லட்சம் லிட்டராக உள்ளது; இதனை, 3.60 லட்சம் லிட்டராக இரட்டிப்பாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவின் பாலகங்களிலும், எல்லாவகையான பால் உப பொருட்களும் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தென்மேற்கு பருவகாலம் துவங்க உள்ளது. எத்தகைய பேரிடர் காலத்திலும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வினியோக சங்கிலி பாதிக்கப்படாது. கடந்த காலங்களில் பேரிடர் காலங்களில் கடைபிடித்த வியூகங்களை கடைபிடித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பால் வினியோகம் இயல்புநிலையில் தொடரச்செய்யப்படும்.
வரும் பண்டிகை காலங்களில், கடந்த ஆண்டைவிட 20 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக ஆவின் பால் பொருட்கள் விற்பனை நடபெறும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவிலேயே மிக குறைந்த விலைக்கு, தரமானதாக விற்பனை செய்யப்படுவது ஆவின்பால் மட்டுமே. அதனால், ஆவினுக்கு நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வுக்கூட்டம் துவங்கியது முதல் முடியும்வரை, அரசு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க செயலர்களை கேள்விகளால் துளைத்தெடுத்தார். மழுப்பல் பதில் அளித்தவர்களுக்கு, பாரபட்சமின்றி, 'டோஸ்' விட்டார்.
அமைச்சர் பேச்சை துவங்கும்போது, முன்வரிசையிலிருந்த கூட்டுறவு சங்கத்தினர் சிலர், தங்களுக்குள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த அமைச்சர், ''சிரிச்சுட்டு இருக்காதீங்க. இங்க கவனிங்க. நான் கேள்வி கேட்டால், சரியாக பதில் சொல்லனும்; இல்லைனா டென்ஷனாகிடுவேன்,'' என்றார்.
அதேபோல், 'தாட்கோ', 'டாம்கோ' உள்பட பல்வேறு திட்டங்களில், பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்காத அதிகாரிகளுக்கு டோஸ் விழுந்தது.
'பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து, பால் உற்பத்தியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்; விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கடன் வழங்குங்கள். இல்லையென்றால், செயலரின் கவனத்துக்கு கொண்டுசென்று, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்' என அமைச்சர் எச்சரித்தார்.
பால் உற்பத்தியாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து நேர்மறையான கருத்துக்கள் வராததையடுத்து, 'கூட்டுறவு சங்கத்தை இழுத்து மூடிவிடலாமா,' என கடிந்துகொண்டார். 'திருப்பூரை திருத்தாமல் விடமாட்டேன்' என அமைச்சர் பகிரங்கமாக சவால் விட்டார். இதனால், அரங்கிலிருந்த அதிகாரிகள் 'கிலி'அடைந்தனர்.