/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் - உடுமலை ரோட்டில் எக்கச்சக்க 'பேண்டேஜ்'
/
பல்லடம் - உடுமலை ரோட்டில் எக்கச்சக்க 'பேண்டேஜ்'
ADDED : ஏப் 22, 2025 06:32 AM

பல்லடம்; பல்லடத்தில், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும், திருப்பூர், தாராபுரம், அவிநாசி, உடுமலை, பொள்ளாச்சி, கொச்சி ஆகிய அனைத்தும், முக்கியமான நெடுஞ்சாலைகள். இவற்றில், கேரள மாநிலத்தை இணைக்கும் பொள்ளாச்சி, உடுமலை நெடுஞ்சாலைகளும் வாகன போக்குவரத்து நிறைந்தவையாக உள்ளன.
குறிப்பாக, கறிக்கோழி வாகனங்கள், சரக்கு மற்றும் கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்டவை அதிக அளவில் இவ்வழியாக வந்து செல்கின்றன.
பிரதான நெடுஞ்சாலைகளாக உள்ள இவற்றை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது, வாகன ஓட்டிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையே, இந்த நெடுஞ்சாலைகளின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்ததை தொடர்ந்து, அவற்றில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. இதனால், 'பேண்டேஜ்கள்' போட்டதைப் போன்று, காலையில் எங்கு பார்த்தாலும், ஒட்டு வேலை செய்யப்பட்டுள்ளது. வேகமாக வந்து செல்லும் வாகனங்கள் இதனால் தடுமாறுகின்றன.
எனவே, வாகன போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி, உடுமலை நெடுஞ்சாலைகளை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ''பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு ஆகிய இரண்டையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி நிலைகளை பொறுத்து அரசு உத்தரவிடும் பட்சத்தில், விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது,'' என்றனர்.