/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவிந்த பிரச்னைகள்; கிடைக்குமா தீர்வுகள்?
/
குவிந்த பிரச்னைகள்; கிடைக்குமா தீர்வுகள்?
ADDED : ஏப் 21, 2025 11:23 PM

திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ்,டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மகளிர் திட்ட இயக்குனர் சாம்சாந்தகுமார் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 583 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, அம்மனுக்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீடு ஒதுக்க வேண்டும்
பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலைமையில் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 15 பேர் அளித்த மனு: திருப்பூர், 11 செட்டி பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறுவதற்காக, கடந்த 2022ல், 65 பேர், ஒரு லட்சம் ரூபாய் வீதம் பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்தினோம். ஆனால் தற்போது நடந்த குலுக்கலில் எங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பங்களிப்பு தொகை செலுத்தி காத்திருக்கும் எங்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்து வழங்கவேண்டும்.
டவர் அமைக்கக்கூடாது
குன்னத்துார் பேரூராட்சி 6வது வார்டு மக்கள் திரண்டுவந்து அளித்த மனு: குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நகரின் மையப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். இப்பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி, நுாலகம், சந்தை கடை அமைந்துள்ளதால், செல்போன் டவர் அமைக்க தடை விதிக்கவேண்டும்.
நோயாளிகள் அவதி
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அளித்த மனு: பல்லடம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் நிறுவப்பட்ட ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பல்லடம் பகுதி நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சைக்காக, திருப்பூர், கோவைக்கு செல்லவேண்டியுள்ளது.
மருத்துவமனையில், நோயாளிகளுடன் வருவோர் தங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடத்தையும் பூட்டிவைத்துள்ளனர். இதனால், மக்கள் ரோட்டில் அமரவேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால், மருத்துவமனைக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளன.
ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழியை மட்டுமே நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளதால், சிரமம் ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு செல்லும் மூன்று வழித்தடங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
பல்லடம் அரசு மருத்துவமனையில் நிர்வாக குளறுபடிகளை சரி செய்து, நோயாளிகளின் இன்னல்களை போக்கவேண்டும்.
அதிகாரிகள் உடந்தை?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனு: திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பாக, திருப்பூர் வடக்கு, மாநகரம், ஊத்துக்குளி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடக்கிறது. அரசு அதிகாரிகளின் உதவியோடு, புரோக்கர்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கும், உள்ளூர் அரிசி ஆலைகளுக்கும் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
அதிகாரிகள், கண்துடைப்புக்காகவே ரேஷன் அரிசி கடத்துவோரை கைது செய்கின்றனர். அரிசி கடத்தலுக்கு துணைபோகும் உணவுப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகளை கண்டறிந்து பணி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புரோக்கர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு அளித்தனர்.