/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தள்ளுவண்டி கடை, ஓட்டல்களில் அதிரடி ஆய்வு
/
தள்ளுவண்டி கடை, ஓட்டல்களில் அதிரடி ஆய்வு
ADDED : பிப் 18, 2024 01:26 AM

திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஓட்டல்களில், இரவு நேரங்களில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதாரம் பேணாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் - அவிநாசி ரோட்டோரம் உள்ள ஓட்டல், தள்ளுவண்டிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுபண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அணைப்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டலில், நாள் முழுக்க திறந்த நிலையில், இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் வைத்து விற்பனை செய்கின்றனர் என, நேற்று முன்தினம் இரவு, திருமுருகன்பூண்டி நுகர்வோர் அமைப்பினர், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார் செய்தனர்.
இதனால், இரவு, 8:30 மணிக்கு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட உணவு பாதுகாப்புத்துறையினர், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். சுத்தம், சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்களை தயாரிக்க கூடாது என, அறிவுறுத்தினர்.
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறியதாவது:
பிஞ்சு குழந்தைகள் விரும்பி உண்ணும், பஞ்சு மிட்டாயில் கூட நஞ்சு ஏற்படுத்தும் செயலில் பலர் ஈடுபடுவது, வருத்தம் தரக்கூடியது ஓட்டல்களில், திரும்ப திரும்ப ஒரே சமையல் எண்ணெய் வாயிலாக தயாரிக்கப்படும், தின்பண்டங்களை தொடர்ந்து உண்பதன் வாயிலாக குடல் புற்றுநோய் ஏற்படுகிறது என, மருத்துவர்கள் எச்சக்கின்றனர்.
அவர் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பாமாயில் கூட, தரம் குறைந்தது என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஓட்டல் உள்ளிட்ட தின்பண்டம் தயாரிக்கும் கடைகளில், அவ்வப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.