/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 நிமிடத்துக்குள்... தேர்தல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்புக்குழு அலுவலருக்கு 'அட்வைஸ்'
/
100 நிமிடத்துக்குள்... தேர்தல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்புக்குழு அலுவலருக்கு 'அட்வைஸ்'
100 நிமிடத்துக்குள்... தேர்தல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்புக்குழு அலுவலருக்கு 'அட்வைஸ்'
100 நிமிடத்துக்குள்... தேர்தல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்புக்குழு அலுவலருக்கு 'அட்வைஸ்'
ADDED : மார் 15, 2024 11:40 PM

திருப்பூர்:'புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறப்பான முறையில் தேர்தல் பணி மேற்கொள்ளவேண்டும்,' என, நோடல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக, 16 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் தலைமையிலான கண்காணிப்புக்குழுவின் கீழ், தேர்தல் பணியாளர் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கான (நோடல் ஆபீசர்) கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் முன்னிலைவகித்தனர்.
கண்காணிப்புக்குழு அலுவலர்களின் பெயர், தொடர்பு எண், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் பணி; ஒவ்வொரு கண்காணிப்புக்குழு அலுவலர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
-----------------------
தகவல்களை உடனுக்குடன்...
அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும். அன்றாட தேர்தல் பணி அறிக்கை விவரங்களை, அடுத்தடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு உடனுக்குடன் பகிரவேண்டும். வங்கி மண்டல மேலாளர்கள், பொது மேலாளர்கள், அலுவலக உதவியாளர் வரை அனைத்து வங்கியாளர் விவரங்களையும் அளிக்கவேண்டும். தேவைக்கு ஏற்ப அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
- கிறிஸ்துராஜ்
கலெக்டர்
-----------------------
'சி-விஜில்' செயலி
தேர்தல் நாள் நெருங்க நெருங்க, பொதுமக்களிடமிருந்து புகார்கள் அதிகளவில் வரத்துவங்கும். 'சி விஜில்' செயலியிலும், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டும் புகார்களை பதிவு செய்வர். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அதிகாரிகள் முழு கவனத்துடன் கண்காணித்து பணியாற்றுவது மிகவும் முக்கியம்.
- ஜெயராமன்
நேர்முக உதவியாளர் (தேர்தல்)
-----------------------
வலைத்தளத்தில் கவனம்...
தேர்தல் புகார்களை டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் கூட கண்காணித்துக் கொண்டிருப்பர்; விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தாமதத்துக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்புவர். புகார் குறித்து பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசியல் கட்சியினரின் விதிமீறல் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் குறித்து, யாரேனும் ஒருவர் போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் கூட பதிவிடலாம். அத்தகைய பதிவுகளையும் உன்னிப்பாக கவனித்து, விளம்பரங்களை அகற்றி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
- ஜெய்பீம்
மாவட்ட வருவாய் அலுவலர்

