/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! அவிநாசி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
/
பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! அவிநாசி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! அவிநாசி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! அவிநாசி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜூலை 25, 2025 11:29 PM

அவிநாசி; பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என வலியுறுத்தி, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையம் பூந்தோட்டம் பகுதியில் வசிப்பவர் யமுனேஷ், 24. பைனான்ஸியர். கடந்த 2 நாள் முன், பச்சாம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே டூவீலரில் நின்று கொண்டு நண்பருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த பழங்கரை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் நடராஜன், 55, என்பவர் யமுனேஷிடம், தன்னைப் பற்றி தவறாக வாட்ஸ்ஆப் குரூப்பில் பதிவிட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, நடராஜன், யமுனேஷை தாக்கி வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டார். தன்னிடமிருந்த சிறிய வெட்டு கத்தியால் அவரை குத்த முயற்சி செய்தபோது அதை கைகளால் யமுனேஷ் தடுத்துள்ளார்.
இதனால், அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் யமுனேஷ் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின், தன்னை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக நடராஜன் மற்றும் அவரது வேலையாட்கள் இருவர் மீது, அவிநாசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடராஜனின் மனைவி சுகந்தி அவிநாசி போலீசில் அளித்த புகாரில், 'தன் கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, ஊர் பொதுமக்களிடையே அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக யமுனேஷ் நடந்து கொண்டார். அவரை துாண்டிவிட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், முன்னாள் யூனியன் கவுன்சிலர் கார்த்திகேயன், முன்னாள் வார்டு உறுப்பினர் சண்முகம்ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியிருந்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையறிந்த பழங்கரை ஊராட்சி தி.மு.க., - அ.தி.மு.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - காங்., - த.வெ.க.,, ஹிந்து முன்னணி ஆகியவற்றின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகையிட்டனர்.
அப்போது போலீசாரிடம் பேசிய பொதுமக்கள், 'எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. வாலிபரை தாக்கி கத்தியால் குத்த முயன்ற நடராஜன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினர் அழுத்தத்தின் காரணமாக, 3 பேர் மீது பொய்யான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்,' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'புகாரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது. யமுனேஷ் அளித்த புகாரில் உள்ள நடராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதி கூறினார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

