ADDED : ஜூலை 23, 2025 09:07 PM
உடுமலை; அந்தியூர்-கொங்கல்நகரம் ரோட்டை விரிவுபடுத்தி, கால்நடை மருத்துவ கல்லுாரி வழியாக கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அந்தியூரில், தேசிய நெடுஞ்சாலையில், இணையும் ரோடு பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இந்த ரோட்டில், பண்ணைக்கிணறு, முக்கூடு ஜல்லிபட்டி, பீக்கல்பட்டி, அந்தியூர் உட்பட கிராமங்கள் அமைந்துள்ளன.
விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில், மின் உற்பத்திக்காக, காற்றாலைகளும் அதிகளவு நிறுவப்பட்டுள்ளன. மின்வாரியத்தின் துணை மின் நிலையம், தனியார் கல்லுாரியும் செயல்பட்டு வருகிறது. மேலும், பண்ணைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட, கோழிக்குட்டையில், அரசின் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இவ்வழித்தடத்தில், உடுமலையில் இருந்து, ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ரோட்டை விரிவுபடுத்தி, கால்நடை மருத்துவ கல்லுாரி வழியாக கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.