/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு கூடுதல் வாய்ப்புகள்
/
ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு கூடுதல் வாய்ப்புகள்
ADDED : பிப் 08, 2025 06:39 AM
திருப்பூர்; அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், ஒவ்வொரு நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கும் வரிவிதிப்பை உயர்த்தி வருகிறார்.
குறிப்பாக, சீனா, மெக்சிகோ பொருட்களுக்கான வரி அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது. சீன ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதிகளுக்கு புதிதாக வரிவிதித்தும், உயர்த்தியும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது, இந்திய உற்பத்தியாளர்களின், போட்டித்திறனை அதிகரிப்பதுடன், அமெரிக்காவின் சந்தை பங்களிப்பை அதிகம் பிடிக்கவும் வழிவகுத்துள்ளது.
விலை குறைவான சீன பொருட்களுக்கு, வரிவிதிப்பால் விலை உயர்வு ஏற்படும்; இதனால், வாடிக்கையாளர்கள் மாற்று பொருட்களை தேடுவர்; இந்தியா, அதன் வலுவான ஜவுளி உற்பத்தித் தளத்தைக் கொண்டு, விருப்பமான பொருட்களை வழங்கும் நாடாகவும் மாற வாய்ப்புள்ளது.
சீன பொருட்களுக்கான செலவு அதிகரித்தால், இந்திய பொருட்களை அதிகம் எதிர்பார்க்கும் சூழல் ஏற்படலாம்.
அதன் வாயிலாக, ஆர்டர்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உலகின் முன்னணி 'பிராண்ட்'கள், தங்கள் முதலீட்டை இந்தியாவுக்கு வழங்கவும் முடிவு செய்ய வாய்ப் புள்ளது.
இந்தியாவில், வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன், ஜவுளித்தொழில் முன்னேறவும் உதவியாக இருக்கும். இதேபோல், 'மெக்சிகன்' ஆடைகளுக்கான வரிவிதிப்பால், விலை உயர வாய்ப்புள்ளது. இதன்மூலமாகவும், இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்திய வர்த்தகத்துக்கு ஆதாரமாக அமையும்.
நம் நாட்டை சேர்ந்த ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித்துறை, ஒரு நிலையான வாய்ப்பை உருவாக்க முடியும். நமது உற்பத்தி செலவுகளை குறைத்து, உற்பத்தியை பெருக்கினால், அமெரிக்க சந்தையை வசப்படுத்த முடியும்.
விரைவாக சரக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.