ADDED : மே 21, 2026 08:43 AM
பொங்கலுார்: ரேஷன் கார்டில் உள்ள முகவரி பல பேருக்கு சரியாக இருப்பதில்லை. எழுத்துப்பிழை மற்றும் முகவரியில் சிறு தவறுகளுடன் வந்து விடுகிறது.இதனால், பொதுமக்கள் இ சேவை மையங்களுக்குச் சென்று முகவரியில் திருத்தம் செய்ய வேண்டி மனு கொடுக்கின்றனர்.
அந்த மனு ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டு திருத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகவரி திருத்தம் கேட்டு வரும் மனுக்களுக்கு ரேஷன் கடையை மாற்றி கொடுத்து விடுகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
ஆன்லைனில் எதை கேட்கிறோமோ, அந்த திருத்தம் மட்டுமே செய்ய வேண்டும். ஆன்லைனில் மனு கொடுத்து விட்டு, நேரில் சென்று கவனித்தால் தான் சரியாக வேலை செய்கின்றனர். இல்லாவிட்டால் வேண்டுமென்றே தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடையை மாற்றி கொடுத்து விடுகின்றனர்.
இதனால், மண்ணெண்ணெய், பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை வாங்க எந்த கடையில் கார்டு உள்ளதோ அங்கு சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. முகவரி திருத்தம் கேட்டால் கவனிப்பு செய்யாதவர்களுக்கு கடையை மாற்றிக்கொடுக்கின்றனர்.
புதிதாக அமைந்த அரசு இது போன்று முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
