ADDED : நவ 20, 2024 11:11 PM
திருப்பூர்; இந்தியாவின் ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தியில், அதிகபட்ச பங்களிப்புடன் இருப்பது திருப்பூர். கடந்த சில மாதங்களாக, பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த திருப்பூர், மீண்டும் மறுமலர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளுக்கு, திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஏற்றுமதியாகின்றன. நாட்டின், ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 51 சதவீதமாக இருப்பது பின்னலாடைகள்.
பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள், புதிய நிறுவனங்களிடம் இருந்து கிடைத்து வருவதால், இந்தாண்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது, கணிசமாக உயரும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.
நடப்பு நிதியாண்டின், ஏப்., முதல் அக்., வரையிலான ஏழு மாதங்களில், ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 73 ஆயிரத்து, 049 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2023-24), இதே காலகட்டத்தில், 64 ஆயிரத்து, 558 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்திருந்தது.
கடந்த நிதியாண்டின், ஆயத்தஆடை ஏற்றுமதியானது, ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 305 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டுகளின் வர்த்தகத்தை ஒப்பட்டு பார்க்கும் போது, நடப்பு நிதியாண்டின் வர்த்தகம், கணிசமாக உயருமென தெரியவந்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், முதல் ஏழு மாதங்களின் பின்னலாடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், டிச., முதல் மார்ச் மாதம் வரையிலான ஏற்றுமதி மிக அதிகமாக நடக்கும். அதன்படி, திருப்பூர் ஏற்றுமதி, இந்தாண்டு 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும்,' என்றனர்.

