/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் வினியோகம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் வினியோகம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் வினியோகம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் வினியோகம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
ADDED : அக் 12, 2025 10:40 PM
உடுமலை;அமராவதி பழைய ஆயக்கட்டு மடத்துக்குளம் பகுதிகளில், சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரக விதைகள் மற்றும் இடு பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், முதல் போகமாக குறுவையில், 2,700 ஏக்கர் பரப்பளவிலும், இரண்டாம் போகமான சம்பா பருவத்தில், 6,500 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் குறுவை பயிராக ஜூன், ஜூலை மாதத்திலும், பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில், சம்பா பயிராக, அக்., - நவ., மாதங்களிலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை துவங்கியுள்ளது. சம்பா பருவத்திற்கான நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், கோ-51, கோ-55, ஏடிடி-57 மற்றும் துாய மல்லி ரக நெல் விதைகள், கிலோவுக்கு, ரூ. 20 மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதில், கோ-51 நெல் ரகமானது, 105 முதல், 110 வயதுடையதாகவும், சம்பா, சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்றதாகும். பச்சை தத்துப்பூச்சி, புகையான் பூச்சிகள் மற்றும் குலைநோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். சராசரியாக ஏக்கருக்கு, 2,600 கிலோ மகசூல் தரும் நடுத்தர, மெல்லிய, சன்ன ரகமாகும்.
அதே போல், கோ-55 ரகம், 110-115 நாட்களில் முதிர்ச்சியடையகூடியதாகும். கார், குறுவை, நவரை, கோடைக்கு ஏற்றதாகவும், நடுத்தர சன்ன ரகமாகும். இந்த ரக நெல், துங்ரோ நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், சராசரியாக ஏக்கருக்கு, 2,500 கிலோ மகசூல் தரக்கூடியதாகும்.
ஏடிடி-57 ரகமானது, 115-120 நாட்கள் சாகுபடி காலமாகவும், கார், குறுவை, நவரை, கோடைக்கு ஏற்ற ரகமாகவும், தண்டு துளைப்பான், இலை மடக்கு புழு, புகையான் ஆகிய பூச்சிகளுக்கும், குலைநோய், இலை கருகல், இலைப்புள்ளி, துங்ரோ நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட ரகமாகும். ஏக்கருக்கு, 2,600 கிலோ மகசூல் தரும் ரகமாகும்.
துாயமல்லி நெல் ரகம், பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். இந்த அரிசி வெண் நிறம், அதிக நார் சத்து உள்ளிட்ட பிற சத்துக்களை கொண்டதாகும். எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும், அதிக ஆண்டி ஆக்சிடேண்டு கொண்ட இந்த ரகம், 135 முதல், 140 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்டது.
மிக சன்ன ரகமாகவும், பூச்சி, நோய் தாக்குதலுக்கு அதிக எதிர்ப்பு திறன் கொண்டதாகவும், ஏக்கருக்கு, 1,125 கிலோ மகசூல் தரக்கூடிய ரகமாகும்.
சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், சிட்டா, ஆதார் நகல் ஆகியவற்றுடன் மானிய விலையில் வேளாண் விற்பனை கிடங்குகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், நெல் சாகுபடிக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சிங்க் பாக்டீரியா ஆகிய இடு பொருட்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.