/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஏ.ஐ.,' தொழில்நுட்ப விழிப்புணர்வு
/
'ஏ.ஐ.,' தொழில்நுட்ப விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2025 11:40 PM
திருப்பூர்; 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில், திருப்பூரில் 'மராத்தான்' நடத்தப்படும்' என, 'யெஸ் இந்தியா கேன்' அறிவித்துள்ளது.
இது குறித்து, 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் தலைவர் 'வால்ரஸ்' டேவிட், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர், கூறியதாவது: 'யெஸ் இந்தியா கேன்', 'ரேவதி மெடிக்கல் சென்டர் அண்ட் இன்ஸ்டிடியூட்' ஆகியன சார்பில், ஏ.ஐ., தொழில்நுட்ப விழிப்புணர்வு மராத்தான் விரைவில் திருப்பூரில் நடத்தப்படும். அதில், தேர்வாகும் துடிப்பான இளைஞர்களுக்கு, 'ஏ.ஐ.,' தொலைநோக்கு முன்முயற்சி திட்டத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
திருப்பூரில் துவங்கும் மூன்றுமாத பயிற்சி திட்டம், நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை வழங்கப்படும். உலக அளவிலான வேலை வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
முதல் கட்டமாக, 50 திறமையான நபர்கள், 'மராத்தான்' மூலமாக தேர்வு செய்யப்படுவர். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழிலையும் உயர்த்துவோம்; நமது வாழ்வாதாரத்தையும் உயர செய்யலாம். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் வரை, பாலியஸ்டர் துணியால் ஆடை தைக்க முடியாத என்றனர்; தற்போது, வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். அதேபோல், புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் புகுத்த வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால் பனியன் தொழிலின் தரம் மென்மேலும் உயரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த விளையாட்டுவீரர்கள் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சியாளர்கள், சார்லஸ் பொரோமியோ, அன்னாவி, நிஷாமுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

