காங்கயம்; மாநிலம் முழுவதும் தொகுதிவாரியாக தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, 11ம் தேதி காங்கயத்துக்கு வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நடராஜ், நகர செயலாளர் வெங்கு மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''பழனிசாமி தலைமையிலான கூட்டணி, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும்.
அவர் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும். இதற் கான நமது முதல் பணியாக, வரும் 11ம் தேதி கூட்டத்தை நடத்த வேண்டும்.
வலுவான இந்தியா அமைவதற்கு பிரதமர் மோடி எப்படி காரணமாக உள்ளாரோ, அதே போல், தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி வழங்க முதல்வராக பழனிசாமியை அமர வைக்க நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.