/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரி உயர்வு இல்லாத அ.தி.மு.க., ஆட்சி
/
வரி உயர்வு இல்லாத அ.தி.மு.க., ஆட்சி
ADDED : மார் 15, 2025 11:53 PM

திருப்பூர்: 'அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகள் வரி உயர்வு இல்லாமல் நடந்ததை நினைத்து பார்க்க வேண்டும்' என, திண்ணை பிரசாரத்தில் விளக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வின், ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியின், பகுதிகள் வாரியாக, கட்சி நிர்வாகிகள் திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்து வருகின்றனர். அதன்படி, ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், நேற்று பாளையக்காடு பகுதியில், திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்தார். கடைகள், வீடு மற்றும் ரோட்டில் சென்ற மக்களிடம், துண்டு பிரசுரங்களை வழங்கி, அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கினார். குறிப்பாக, பேக்கரியில் டீ சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களுடன் அமர்ந்து பேசினார்.
அப்போது, ''அ.தி. மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, புதிய கட்சி வேண்டுமென இளைஞர்கள் நினைப்பது தவறு; இரு ஆட்சியில் நடந்த திட்டங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போதுதான், திருப்பூரில், அ.தி.மு.க., ஆட்சியில் செய்த மக்கள் நலப்பணிகளை கண்டறிய முடியும்.
தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பாதிப்புகளை உணர வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகள் வரி உயர்வு இல்லாமல் நடந்ததை நினைத்து பார்க்க வேண்டும்,'' என்றனர்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பகுதி செயலாளர் முத்து, கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களிடையே, அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.