ADDED : அக் 19, 2024 12:43 AM
மாசுக்கட்டுப்பாடு வாரியம், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் காற்று குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துவைக்கிறது. பின்னலாடை நகரான திருப்பூரில், வரும் 24ம் தேதி முதல் நவம்பர் 7 ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்களுக்கு காற்று மாசு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
வரும் 24ம் தேதி காலை முதல், 30ம் தேதி வரை பண்டிகைக்கு முந்தைய காற்று மாசு கணக்கிடப்படுகிறது; 31ம் தேதி முதல் நவம்பர் 7 ம் தேதி வரை, பண்டிகை கால காற்றுமாசு அளவிடப்படும். காற்று மாசு அளவீடு செய்வதற்காக, மாசுக்கட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள குமரன் வணிகவளாகம் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த ராயபுரத்திலும் 'ஆம்பியன் ஏர்குவாலிட்டி மெஷர்மென்ட்' கருவி பொருத்தப்படுகிறது.
இந்த கருவியினுள், பில்டர் காகிதம் வைக்கப்பட்டு, காற்றில் கலந்துள்ள 2.5 மற்றும் 10 மைக்ராக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள்; சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு அளவுகள் பதிவு செய்யப்படும். தீபாவளி நாளன்று ஒலி மாசும் அளவீடு செய்யப்படும்.
எல்லை எவ்வளவு?
சுவாசிக்க தகுந்த காற்றில், கலந்துள்ள நுண் துகள்களின் அளவு எவ்வளவு இருக்கவேண்டும் என்று அளவீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண்துகள்கள் (பி.எம்., 10), 100 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப்--க்குள்; 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண்துகள்கள், 60 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப்- க்கு ள் இருக்கவேண்டும். சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, 80 மைக்ரோ கிராம் / மீட்டர் க்யூப்க்கு உள்ளாக இருக்க வேண்டும். ஒலியை பொறுத்தவரை, குடியிருப்பு பகுதியில் பகலில் 55 டெசிபல்; இரவில் 45 டெசிபல். தொழிற்சாலை பகுதியில், பகலில், 75 டெசிபல்; இரவில், 70 டெசிபல்லுக்குள் இருக்க வேண்டும்.
மாசு அளவீடுகள் ஒப்பீடு
தீபாவளிக்கு முந்தைய மற்றும் பண்டிகை நாள் காற்று மாசு அளவீடுகள் ஒப்பீடு செய்யப்பட்டு, மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும். தீபாவளி நாட்களில், திருப்பூரில் காற்று, ஒலி மாசு சீராக உள்ளதா; எல்லை மீறுகிறதா என்கிற விவரங்கள் ஆய்வு முடிவில் தெரியவரும்.
