ADDED : ஜன 15, 2024 12:47 AM

திருப்பூர்:மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருப்பூர் தெற்கு அலுவலகம் மற்றும் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 திட்டம் சார்பில், பொங்கலுார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில்,' புகையில்லா போகி' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். பொ.வெ.க.நாயுடு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலன், தலைமை வகித்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில், ''நம் முன்னோர், இயற்கை சார்ந்த தேவையற்ற பொருட்களை எரித்து, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடினர்.
தற்போது, அந்த நடைமுறை மாறி, ரப்பர், பழைய டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரியூட்டி, போகி கொண்டாடுகின்றனர். அவற்றை எரியூட்டுவதால், காற்று மாசு ஏற்படுவதுடன், அதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் பல்வேறு உடல் உபாதை ஏற்படும்.
எனவே, காற்றின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்றார்.பின், செம்மலைக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன், பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார் முன்னிலையில், மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வாயிலாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
கல்வித்துறை அதிகாரி பூங்கொடி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சிவகுமார், நன்றி கூறினார்.