/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு நோய் பாதிப்பில்லை சான்று தேவை ஆல்கொண்டமால் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
/
கால்நடைகளுக்கு நோய் பாதிப்பில்லை சான்று தேவை ஆல்கொண்டமால் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கால்நடைகளுக்கு நோய் பாதிப்பில்லை சான்று தேவை ஆல்கொண்டமால் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கால்நடைகளுக்கு நோய் பாதிப்பில்லை சான்று தேவை ஆல்கொண்டமால் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஜன 14, 2025 01:26 AM
உடுமலை; ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகளுக்கு, நோய் பாதிப்பில்லை என்ற கால்நடை மருத்துவரின் சான்றை சமர்ப்பிக்க வேண்டும், என, கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடை வளம் பெருக, பொங்கலையொட்டி கோவிலில் நடக்கும் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
மேலும், பொங்கலையொட்டி மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமால் சுவாமிக்கு உரியது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
எனவே, இத்தகைய கன்றுகளை கோவிலுக்கு தானமாக வழங்கும் நடைமுறை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கோவிலில் கோசாலை வசதி இல்லாததால், தானமாக வழங்கப்படும் கன்றுகளை, பிற மாவட்டங்களிலுள்ள கோசாலைகளுக்கு அனுப்பும் நடைமுறை இருந்தது. இதற்கு பராமரிப்பு கட்டணமாக, கன்றுக்கு, ஆயிரம் ரூபாய் கோவில் நிர்வாகத்தால் வசூலிக்கப்படுகிறது.
இந்தாண்டு, கால்நடைகளை தானமாக வழங்க பல்வேறு விதிமுறைகளை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த விதிமுறைகள் குறித்து, முன்கூட்டியே போதிய விழிப்புணர்வு இல்லாததால், இம்முறை பக்தர்களிடையே கால்நடை தானம் வழங்குவதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு வருமாறு:
l தானமாக வழங்கப்படும் கிடாரி, காளை இனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
l நோய் தாக்காமல் இருக்க ஆந்தராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கும், நோய் பாதிப்பு எதுவும் இல்லை என்பதற்கும், வயதுக்கும் கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்று கோவில் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
l கால்நடைகள் பராமரிப்பு செலவுக்கு ஒவ்வொரு கால்நடைக்கும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
l கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம், 2, 3, 4ம் தேதிகளில் நடைபெறும் தமிழர் திருநாள் விழாவின் போது மட்டுமே, கால்நடைகளை காணிக்கையாக வழங்கலாம்.
இவ்வாறு, விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.