/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை வளம் காக்கும் ஆல்கொண்டமாலன்! திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தயார்
/
கால்நடை வளம் காக்கும் ஆல்கொண்டமாலன்! திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தயார்
கால்நடை வளம் காக்கும் ஆல்கொண்டமாலன்! திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தயார்
கால்நடை வளம் காக்கும் ஆல்கொண்டமாலன்! திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தயார்
ADDED : ஜன 15, 2024 12:22 AM

உடுமலை;கால்நடை வளம் காக்கும், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், பொங்கல் திருவிழா நாளை, 16ம் தேதி சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. கோவிலில், சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது.
பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் கோவிலில், நடக்கும் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்கின்றனர்.
தல வரலாறு!
திருமால் எழுந்தருளியுள்ள இக்கோவிலில், சுயம்புவாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் தானாக பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளதாக, சுற்றுப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டை காலத்தில், கோவிலின் அருகிலுள்ள காடுகளில் மேய்ந்து வந்த பசுக்கள், புற்றுக்கு தானாக பாலை சொரிந்து அபிேஷகம் செய்துள்ளன.
லிங்க வடிவ புற்றுக்கு, பசுக்கள் பால் சொரிவதைக்கண்ட பொதுமக்கள், இது ஆயர்பாடி கண்ணின் மகிமைதான் என்று கருதினர். ஆலம் (விஷம்) உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடிகொண்டதால், அங்குள்ள திருமாலை, 'ஆல்கொண்டமால்' என்று மக்கள் வழிபட துவங்கினர்.
சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவாசாயிகள் பால், வெண்ணை உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து வழிபடுகின்றனர். இங்கு, வழிபட்டுச்செல்வதால் கால்நடைகள் நோய் தாக்குதல் இல்லாமல், ஆரோக்கியத்துடன் இருப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர்.
திருவிழா துவக்கம்
இந்தாண்டு, கோவிலில் திருவிழா, நாளை (16ம் தேதி) அதிகாலை, சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் துவங்குகிறது. பகல், 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை, 6:00 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜை நடக்கிறது.
வரும், 17ம் தேதி முக்கிய நிகழ்வான திருவிழா நடக்கிறது. அன்று, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து சலகெருதுகள் அழைத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
பாரம்பரிய கலையான தேவராட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைகளை ஆடி, பாலாபிேஷகம் செய்து, உருவார பொம்மைகளை வைத்து, ஆல்கொண்டமாலனை தரிசனம் செய்கின்றனர்.
வரும், 18ம் தேதி, அதிகாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு, மகாபிேஷகம், சிறப்பு அலங்காரம், இரவு 9:00 மணிக்கு, சுவாமி திருவீதியுலா, வானவேடிக்கை நடைபெற உள்ளது.
ஏற்பாடுகள் தயார்
பக்தர்கள் வசதிக்காக, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், தடுப்புகள் மற்றும் கோவில் அருகில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை கிளை போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் வரும், 17 ம் தேதி இயக்கப்படும்.
சோமவாரப்பட்டி ஊராட்சி சார்பில், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவில் அருகிலுள்ள மைதானத்தில், கேளிக்கை விளையாட்டு சாதனங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.