ADDED : மார் 15, 2026 05:57 AM

பல்லடம்: பல்லடத்தில், - செட்டிபாளையம் ரோடு, கரடி வாவி, செலக்கரச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம் வழியாக, கொச்சி செல்லும் பைபாஸ் சாலையை இணைக்கிறது. நெடுஞ்சாலை துறை வசம் உள்ள இந்த ரோடு, சரக்கு போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது.
கோவை செல்ல மாற்று வழியாகவும் உள்ள இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மிகவும் மோசமாக காணப்படுகிறது. பல்லடம் -- கரடிவாவி வரை உள்ள, 12 கி.மீ. துாரமுள்ள இதனை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுக்கு முன், பணிகள் முடிந்தன.
ஆனால், கே.அய்யம்பாளையம் -- முத்தணம்பாளையம் பிரிவு வரையிலான 2 கி.மீ. ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த இந்த ரோட்டை புதுப்பிக்காமல், ஒட்டு போடும் வேலையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது.
இதே ரோட்டில், ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட ஒட்டு வேலைகள் நடந்துள்ளன. இதனால், வாகனங்களின் வீல்களில் உள்ள போல்டு, நட்டுகள் கழன்று விடும் அளவுக்கு, வாகனங்களை அதிரச்செய்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரோடுகள் புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், விடுபட்ட இப்பகுதி, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலையில்தான் உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒட்டு போதாது என்று கருதிய நெடுஞ்சாலைத்துறை, மீண்டும் ஒட்டு போடும் வேலைகளை துவக்கி உள்ளது.
இது, வாகன ஓட்டிகள், பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
