/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நினைவாக மாறும் அமராவதி அணை பூங்கா! அக்கறை காட்டாத பொதுப்பணித்துறை
/
நினைவாக மாறும் அமராவதி அணை பூங்கா! அக்கறை காட்டாத பொதுப்பணித்துறை
நினைவாக மாறும் அமராவதி அணை பூங்கா! அக்கறை காட்டாத பொதுப்பணித்துறை
நினைவாக மாறும் அமராவதி அணை பூங்கா! அக்கறை காட்டாத பொதுப்பணித்துறை
ADDED : ஆக 12, 2025 07:48 PM

உடுமலை; அமராவதி அணை பூங்காவை பராமரிக்க, பொதுப்பணித்துறை அக்கறை காட்டாத நிலையில், மேம்பாட்டு நிதியும் நீண்ட காலமாக ஒதுக்கப்படவில்லை. 'இங்கு ஒரு பூங்கா இருந்தது' என்ற அளவுக்கு சுவடு இல்லாமல் அனைத்து கட்டமைப்புகளும் வீணாகி வருகிறது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில், அமராவதி அணை அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அப்பகுதியில், 1956ல், அணை கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு, பொதுப் பணித்துறை சார்பில், பூங்கா அமைத்து படிப்படியாக விரிவாக்கம் செய்தனர்.
அணை மதகுகளின் இருபுறமும், சுமார் ஒரு கி.மீ.,க்கும் அதிகமான தொலைவுக்கு, இப்பூங்கா அமைக்கப்பட்டது.
நீருற்று, சிலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், புல்வெளி, இருக்கைகள் என பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது.எதிரில், உயிரியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வுக்காக பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டன.
கேரளா மறையூர், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணியர், ஆர்வத்துடன் அமராவதி அணை பூங்காவுக்கு வருகின்றனர்.
பராமரிப்பு இல்லை ஆனால், பராமரிப்பு இல்லாமல் பூங்கா பரிதாப நிலையில் இருப்பதை பார்த்து வேதனையுடன் திரும்பிச்செல்கின்றனர். உடைந்துள்ள நீருற்று, சிலை, இருக்கைகளை சீரமைக்கவும் பொதுப்பணித்துறையினர் அக்கறை காட்டவில்லை.
பூங்காவினுள் நடமாடவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. உயிரியல் பூங்கா நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. கழிப்பிடம்; குடிநீர் வசதியும் இல்லை.
மேம்பாட்டு நிதிக்காக, பொதுப்பணித்துறை சார்பில் பல முறை கருத்துரு அனுப்பியும் அரசு நிதி ஒதுக்கவில்லை. இவ்வாறு, பூங்கா மேம்பாட்டை அரசு ஒதுக்கியதால், அங்கு செல்வதையும் சுற்றுலா பயணியரும் ஒதுக்கி வருகின்றனர்.
பூங்காவில் எப்போதாவது புற்களை மட்டும் அகற்றுகின்றனர். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என அப்போதைய தி.மு.க., அரசால் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப்பிறகு மாவட்டத்துக்கு, சுற்றுலாத்துறை தனியாக உருவாக்கப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.
உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் இருக்கும் இடமே தெரியாமல் மறையும் அளவுக்கு சென்று வருகிறது. இதே நிலை நீடித்தால், அமராவதி அணை முன்பு 'இங்கு ஒரு பூங்கா இருந்தது', என தகவல் பலகை வைக்கும் அவல நிலை ஏற்படும்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை இணைந்து அமராவதி அணை பூங்காவை மீட்டு புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.