sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி தடுப்பணைகளை துார்வார... நடவடிக்கை எடுங்க!மீன் உற்பத்தியில் தொடரும் சிக்கல்கள்

/

அமராவதி தடுப்பணைகளை துார்வார... நடவடிக்கை எடுங்க!மீன் உற்பத்தியில் தொடரும் சிக்கல்கள்

அமராவதி தடுப்பணைகளை துார்வார... நடவடிக்கை எடுங்க!மீன் உற்பத்தியில் தொடரும் சிக்கல்கள்

அமராவதி தடுப்பணைகளை துார்வார... நடவடிக்கை எடுங்க!மீன் உற்பத்தியில் தொடரும் சிக்கல்கள்


ADDED : நவ 17, 2025 01:02 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமராவதி ஆற்றில், மீன் குஞ்சுகள் விடப்பட்டாலும், தடுப்பணைகள் துார்வாரப்படாமல், ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், மீன் உற்பத்தியில் தொடர் சிக்கல்கள் நிலவுகிறது. பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

உடுமலை அருகே, அமராவதி அணையிலிருந்து துவங்கும் அமராவதி ஆறு, முன்பு மீன் வளம் மிக்க, நீராதாரமாக இருந்தது. குறிப்பாக கொழுமம் சுற்றுப்பகுதிகளில், மீன்பிடி தொழிலும், அதை சார்ந்து அதிகளவு தொழிலாளர்களும் இருந்தனர்.

பல்வேறு காரணங்களால், மீன் பிடி தொழில் பாதிப்படைந்தது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல கிராமங்களில், இத்தொழிலை ஆதாரமாகக்கொண்ட தொழிலாளர்கள், தொடர்ந்து பாதித்து வருகின்றனர்.

உள்ளூர் தொழிலாளர்களின் நலனுக்காக, மத்திய அரசின், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஒரு முறை ஆற்றில் மீன்குஞ்சுகள் விடப்படுகிறது.

இந்தாண்டு, கொழுமம் பகுதியில், அமராவதி ஆற்றில், 2 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் ரக மீன்குஞ்சுகள், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சமீபத்தில் விடப்பட்டது. இவ்வாறு ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யப்படுவதால், அவை வளர்ந்து, மீன்பிடி தொழில் பாதிப்பிலிருந்து மீளும்; தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் அனைத்திலும், மீன்கள் வளர்வதற்கான சூழல் குறைந்து வருவதாக, இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது: அமராவதி ஆற்றின் மீன் வளத்தை மீட்டெடுக்க, மீன் குஞ்சுகள் விடும் சிறப்பு திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் அனைத்திலும், ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அதிகளவு உள்ளது. இவ்வகை செடிகள் நீர் வாழ் உயிரினங்களை பல வகையிலும் பாதிக்கிறது.

நீரோட்டம் குறையும் போது, ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் பகுதிகளிலும் இப்பிரச்னை உள்ளது.

மேலும், ஆற்றங்கரையோர கிராமங்களில் இருந்து நேரடியாக கழிவு நீர் ஆற்றில் விடப்படுகிறது. தண்ணீர் மாசடைந்து, ஆற்றில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரும்பாலும் இறந்து விடும் வாய்ப்புள்ளது.

மீன் உற்பத்தி குறைவதால், அதை வாழ்வாதாரமாகக்கொண்ட தொழிலாளர்கள் வருவாய் இழக்கின்றனர். அரசு செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கம் வீணாகிறது.

தடுப்பணைகளில் ஆகாயதாமரையை முழுவதுமாக அகற்றி துார்வார வேண்டும்; கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியமாகும்.

இத்தகைய பணிகளை பொதுப்பணித்துறை வாயிலாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டால், தண்ணீர் மாசடைவது தவிர்க்கப்படும்; மீன் உற்பத்தியும் அதிகரித்து நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இது குறித்து தொடர்ந்து அரசுக்கும் மனு அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

கண்டுகொள்ளாத உள்ளாட்சிகள் அமராவதி ஆற்றங்கரையில், மடத்துக்குளம், உடுமலை ஒன்றியங்களைச்சேர்ந்த, ஊராட்சிகள் அதிகளவு உள்ளன. இந்த ஊராட்சிகளில் இருந்து குப்பை உள்ளிட்ட கழிவுகள் ஆற்றங்கரையிலும், நேரடியாக தண்ணீரிலும் கொட்டப்படுகிறது.

கரையோரங்களில், பல்வேறு இடங்களில் வீணாக கிடக்கும் குப்பைத்தொட்டிகளை வைத்தால், ஆறு மாசடைவதை தடுக்க முடியும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை குறித்து, நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us